Skip to main content

Advertisement

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா - ஆட்டத்தை மாற்றிய 10-வது வீரர் யார்?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.
ACC
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

ஓமனில் சனிக்கிழமை நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் 339 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டன் லக்‌ஷ்யா ராஜேஷ் ராய்சந்தானி 80 ரன்களும், ஆர்யவீர் சேவாக் 58 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தனர். வி.கே. வினீத் 24 ரன்களும், அன்வய் திராவிட் 19 ரன்களும், அர்ஜுன் ராஜ்புத் 16 ரன்களும், யஷ்வர்தன் சௌஹான் 9 ரன்களும் எடுத்தனர்.

8 விக்கெட்டுகள் விழுந்த பிறகு இந்திய அணியின் ஆட்டம் தடுமாறியது. ஆனால், மொஹித் உல்வா, மனல் சௌஹான் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

கடைசிப் பந்துவரை நீடித்த பரபரப்பு

கிரிக்இன்போ தகவலின்படி இந்திய அணியின் 10-வது வீரராகக் களமிறங்கிய மொஹித் உல்வா, வெறும் 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

கடைசி ஓவர் வரை ஆட்டத்தில் பரபரப்பு நீடித்தது. அந்த ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. அகமது ஹுசைன் வீசிய ஐந்தாவது பந்தில் சிகுருபதி வெங்கட் ஒரு ரன் எடுத்து, ஆட்டத்தை முடிக்கும் பொறுப்பை மொஹித் உல்வாவிடம் ஒப்படைத்தார்.

கடைசிப் பந்தில் லாங் ஆஃப் திசைக்கு மேலாகப் பந்தைத் தூக்கி அடித்து அற்புதமான பவுண்டரி பெற்ற உல்வா, இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்த உல்வாவின் இன்னிங்ஸில் 5 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும்.

பாகிஸ்தானின் ஆட்டம் எப்படி இருந்தது?

பாகிஸ்தான் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கியது. முதல் ஆறு ஓவர்களிலேயே அந்த அணி 93 ரன்கள் எடுத்திருந்தது.
ACC
பாகிஸ்தான் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கியது. முதல் ஆறு ஓவர்களிலேயே அந்த அணி 93 ரன்கள் எடுத்திருந்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 107 ரன்கள் எடுத்தார். 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் நான்காவது சதம் இதுவாகும்.

அணியின் கேப்டன் ஃபர்ஹான் யூசுஃப் 63 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். அப்துல் காதிர் 54 பந்துகளில் அதிரடியாக 80 ரன்கள் குவித்தார். அவரது இன்னிங்ஸில் 8 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும்.

பாகிஸ்தான் அணி தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது. முதல் ஆறு ஓவர்களிலேயே 93 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கானும் அப்துல் காதிரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்து இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். 27-வது ஓவரில் காதிர் ஆட்டமிழந்தார். உஸ்மான் தனது சதத்தை நிறைவு செய்த பிறகு 37-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

ஒரு கட்டத்தில் 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான், மிகப் பெரிய ஸ்கோரை எட்டும் நிலையில் இருந்தது. ஆனால், கடைசி 10 ஓவர்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானின் ரன் குவிக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.

இந்திய அணியில் காவ்யா படேல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிகுருபதி வெங்கட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இறுதிப் போட்டியில் மோதிய அணிகள்

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.
ACC
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதின. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், 2025-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது.

இறுதிப் போட்டிக்கு முன்பு இந்தத் தொடரில் பாகிஸ்தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்திய அணி அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டிக்கான தனது 11 பேர் கொண்ட அணியில் பாகிஸ்தான் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இந்திய அணியோ, தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இஷான் சூத்க்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவருக்கு பதிலாக சிகுருபதி வெங்கட்டை அணியில் சேர்த்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு