Skip to main content

Advertisement

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: அரசாணை வெளியாகாததால் தவிக்கும் மக்கள் – நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் என்ன?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
பரந்தூர் கிராமம், தமிழ்நாடு அரசு, சென்னை, விமான நிலையம், முதலமைச்சர் ஜோசப் விஜய்
TNDIPR
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பரந்தூரில் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

'அரசுக்குத் தோன்றும் விருப்பங்களின் அடிப்படையில் ஒரு விமான நிலையத்தைக் கட்டமைக்க முடியாது. நிலம் கையகப்படுத்தி பொதுமக்களின் பணத்தைச் செலவிட்ட பிறகு திட்டத்தை எப்படிப் பாதியிலேயே கைவிட முடியும்?'

வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எழுப்பிய இந்தக் கேள்வி, பரந்தூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திட்டத்தை முதலமைச்சர் ரத்து செய்துவிட்டாலும் பத்திரப்பதிவுக்கான தடை விலக்கப்படாததால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக, பரந்தூர் மக்கள் கூறுகின்றனர்.

"110 விதியின்கீழ் முதலமைச்சர் திட்டத்தை ரத்து செய்தும் அரசாணை வெளியிடப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது" என்கிறார், தி.மு.க எம்.பி வில்சன். ஆனால், விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளதாக, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் கடந்த தி.மு.க அரசு தீவிரம் காட்டியது. அங்குள்ள கிராமங்களில் இருந்து சுமார் 5746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டது.

நிலங்களை ஒப்படைக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சுமார் 1822 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அங்குள்ள நெல்வாய் உள்ளிட்ட சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அரசின் திட்டத்துக்காக நிலங்களை ஒப்படைத்துவிட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பரந்தூரில் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி புதிய விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.

சட்டப்பேரவையின் 110வது விதியின்கீழ் இதனை அறிவித்த முதலமைச்சர், "புதிய விமான நிலையம் அமைப்பதற்குத் தேவைப்படும் இடமானது, விவசாயிகளை பாதிக்காத வகையிலும் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைக்க வேண்டும்" எனக் கூறினார்.

ஆனால், கடந்த அரசு விவசாயிகளை பாதிக்கும் வகையில் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். சென்னை மாநகரத்தின் தேவைகள், பயணிகளின் வசதிகள், சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், 'சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக முன்மொழியப்பட்ட திட்டத்தை கைவிடுவது என்ற மாநில அரசின் முடிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது' என அறிவிக்கக் கோரி, கவுதமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் கொள்ளளவு நெருக்கடியை சரிசெய்யும் நோக்கத்தில் பரந்தூரில் பசுமை விமான நிலையத் திட்டம் உருவாக்கப்பட்டதாக மனுவில் அவர் கூறியுள்ளார்.

'தரவுகளே இல்லாமல் திட்டம் ரத்து'

பரந்தூர் கிராமம், தமிழ்நாடு அரசு, சென்னை, விமான நிலையம், முதலமைச்சர் ஜோசப் விஜய்
BBC
கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி புதிய விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.

'திட்டத்தை செயல்படுத்துவதற்காக பொதுமக்களின் வரிப்பணத்தில் சுமார் 680 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுவிட்டது. பல்வேறு கிராமங்களில் இருந்து 1700 ஏக்கருக்கும் மேல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது' என மனுவில் கவுதமன் குறிப்பிட்டுள்ளார்.

'அந்தவகையில், பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடும் முடிவை மறுபரிசீலனை செய்து தகுந்த காரணங்களுடன் கூடிய முடிவை எடுக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் அவர் கோரியிருந்தார்.

வெள்ளிக்கிழமையன்று மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் நீர்நிலைகளைக் காப்பது போன்ற பொதுநலன் சார்ந்த காரணங்களுக்கு மாநில அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ளலாம்" எனக் கூறினார்.

"ஆனால், திட்டத்தைக் கைவிடுவது தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது, அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதுவும் முறையாக பரிசீலிக்கப்படவில்லை. அதன் விளைவுகள் குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை" என அவர் வாதிட்டார்.

"திட்டத்தைக் கைவிடுவதை ஏற்கும் வகையில் எந்தவித தரவுகளோ, நிபுணர் குழு அறிக்கையோ அல்லது பொருளாதார ஒப்பீட்டு ஆய்வுகளோ சமர்ப்பிக்கப்படவில்லை" என மனுதாரர் தரப்பு வாதிட்டது.

"அரசின் பல்வேறு அமைப்புகளின் மதிப்பீடுகளைப் பெற்று மத்திய அரசின் நிபந்தனையுடன் கூடிய அனுமதியைப் பெற்ற ஒரு திட்டம், எந்தவொரு நிபுணர்களின் தரவுகளும் இல்லாமல் சட்டப்பேரவையில் ரத்து செய்யப்பட்டது" என்கிறார்.

திட்டத்தை நிறுத்துவது தொடர்பான அரசின் முடிவு, தன்னிச்சையானது எனக் கூறிய மனுதாரரின் வழக்கறிஞர், " இது அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை மீறுகிறது" எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, "நிலத்தைக் கையகப்படுத்தி பொதுமக்களின் பணத்தைச் செலவிட்ட பிறகு ஒரு திட்டத்தை எப்படிப் பாதியிலேயே கைவிட முடியும்?" என தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு கேள்வி எழுப்பியதாக, 'லைவ் லா' தளம் குறிப்பிட்டுள்ளது.

'விருப்பங்களின் அடிப்படையில் அமைக்க முடியாது' - நீதிபதிகள்

பரந்தூர் கிராமம், தமிழ்நாடு அரசு, சென்னை, விமான நிலையம், முதலமைச்சர் ஜோசப் விஜய்
BBC
பரந்தூர்

விமான நிலையத்தைக் கட்டமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் மற்றும் நில ஆய்வு போன்ற பல்வேறு நடைமுறைகளுக்குப் பின்னரே முடிவு எடுக்கப்பட்டிருக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், "தவறான முடிவை எப்போது வேண்டுமானாலும் திருத்திக் கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டார்.

தேவைப்படும் நிலங்களில் ஒரு பகுதி மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு அந்த இடத்தில் விமான நிலையம் அமைப்பது சாத்தியமில்லை என புதிய அரசு கூற முடியாது. விமான நிலையங்களை உங்களுக்குத் தோன்றும் விருப்பங்களின் அடிப்படையில் அமைத்துவிட முடியாது" எனவும் நீதிமன்றம் வாய்மொழியாக குறிப்பிட்டதாக, 'லைவ் லா' தளத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், "திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பெரும்பகுதிகள் நீர்நிலைகள் அல்லது விவசாய நிலங்களாக உள்ளன. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவது கடினம் என்பதைக் கருத்தில் கொண்டு திட்டத்தைக் கைவிட மாநில அரசு முடிவு செய்தது" எனக் கூறினார்.

"ஒரு குறிப்பிட்ட இடத்தில் விமான நிலையத்தை அமைக்கும் முடிவை எடுப்பதற்கு முன்னரே இத்தகைய காரணிகள் எல்லாம் சாத்தியக் கூறு ஆய்வின்போது பரிசீலிக்கப்பட்டிருக்கும்" என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இதுதொடர்பாக மாநில அரசு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவை நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

'அரசாணை ஏன் வெளியிடப்படவில்லை?'

பரந்தூர் கிராமம், தமிழ்நாடு அரசு, சென்னை, விமான நிலையம், முதலமைச்சர் ஜோசப் விஜய்
Wilson/Facebook
மூத்த வழக்கறிஞரும் தி.மு.க எம்.பியுமான வில்சன்

பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிடப்படாதது குறித்தும் நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது.

இதனைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் பேசிய மூத்த வழக்கறிஞரும் தி.மு.க எம்.பியுமான வில்சன், "என்ன காரணத்துக்காக திட்டம் ரத்து செய்யப்பட்டது என்ற காரணத்தை அரசாணையில் கூறவேண்டும். சுமார் 80 நாட்கள் கடந்த பின்னரும் அமைதியாக உள்ளனர்" என்கிறார்.

"பரந்தூர் விமான நிலையம் என்பது மிகப் பெரிய திட்டம். அங்கு சுமார் 50 சதவீதத்துக்கும் மேல் நிலத்தைக் கையகப்படுத்திய பிறகு வாய்மொழியாக திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டதை ஏற்க முடியாது" என்கிறார் அவர்.

"110 விதியின்கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்ததைத் தவிர வேறு எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. அரசியல்ரீதியாக கொடுத்த வாக்குறுதிகளுக்காக திட்டத்தை ரத்து செய்துள்ளனர்" என்கிறார் வில்சன் எம்.பி.

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்ட எதிர்ப்புக் குழுவின் தலைவர் சுப்ரமணியனிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, "அரசாணையை வெளியிடுமாறு அரசுத் துறைகளின் கவனத்துக்குத் தொடர்ந்து கொண்டு சென்று வருகிறோம்" எனக் கூறுகிறார்.

அரசாணை தொடர்பாக நீதிமன்றத்தில் அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் சில தகவல்களைத் தெரிவித்தார். "திட்டத்தை ரத்து செய்ததற்கான காரணங்கள் மற்றும் பின்னணியை விளக்கும் வகையில் அரசாணை வெளியிடப்படும். அதனைத் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன" எனத் தெரிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசும் சுப்ரமணியன், "அரசாணை தொடர்பாக அரசின் தலைமை வழக்கறிஞர் முன்வைத்த விளக்கம் முக்கியமானது. இதனை பரந்தூர் மக்கள் வரவேற்கின்றனர்" எனக் கூறினார்.

பரந்தூர் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

பரந்தூர் கிராமம், தமிழ்நாடு அரசு, சென்னை, விமான நிலையம், முதலமைச்சர் ஜோசப் விஜய்
BBC
கதிரேசன்

அதேநேரம், அரசாணை வெளியிடப்படாததால் பல்வேறு சிரமங்களை பரந்தூரில் உள்ள பல்வேறு கிராம மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசும் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன், "தற்போது வரை பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாகப் பிரிவினை, சொத்துகளை விற்பது, அடமானம் செய்வது போன்ற எதையும் மேற்கொள்ள முடியவில்லை" எனக் கூறுகிறார்.

அதேபோல், வருவாய்த் துறை பதிவேடுகளில் பட்டா மாற்றம், திருத்தம் போன்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், "இதனால் கிராம மக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். அரசாணை வெளியிட்ட பிறகு இதர தடைகளை அரசு நீக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

"இதுபோன்ற சிக்கல்கள் விரைவில் களையப்பட வேண்டும்" எனக் கூறும் சுப்ரமணியன், "கடந்த சில ஆண்டுகளாக ஏகனாபுரத்தில் யாரும் புதிதாக வீடு கட்டவில்லை. தற்போது சுமார் 20 பேருக்கும் மேல் வீடு கட்டத் தயாராகிவிட்டனர்" என்கிறார்.

ஆனால், பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், 'வீடு கட்டலாமா?' என்ற யோசனையில் அவர்கள் ஆழ்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொள்கை முடிவை ரத்து செய்ய முடியுமா?

பரந்தூர் கிராமம், தமிழ்நாடு அரசு, சென்னை, விமான நிலையம், முதலமைச்சர் ஜோசப் விஜய்
BBC
பரந்தூர்

தமிழ்நாடு அரசு கொள்கை முடிவை எடுத்து பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததாக, உயர் நீதிமன்றத்தில் அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தெரிவித்தார்.

"அவ்வாறு அறிவிக்கப்பட்டால் நீதிமன்றம் தலையிட முடியுமா?" என, தி.மு.க எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சனிடம் கேட்டபோது, "கொள்கை முடிவெடுத்து அறிவித்தால் அதனை செயல்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது தொடர்பாக பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன" என்கிறார்.

"மதுரவாயல்-எண்ணூர் பறக்கும் சாலையை 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா அரசு ரத்து செய்தது. கூவத்துக்கு நடுவில் திட்டம் செயல்படுத்தப்படுவதால் மழைக் காலத்தில் சென்னைக்குள் தண்ணீர் வந்துவிடும் என நீதிமன்றத்தில் அ.தி.மு.க அரசு வாதிட்டது" என்கிறார்.

"தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்காக நான் வாதிட்டேன். வழக்கின் தீர்ப்பில், திட்டத்தைத் தொடர்ந்து நடத்தி முடிக்குமாறு உத்தரவிடப்பட்டது. தற்போது அந்தத் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்கிறார் அவர்.

பரந்தூரில் நீர்நிலைகள் அதிகளவில் இருப்பதை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதுகுறித்துப் பேசும் வில்சன், "நீர்நிலைகளை பாதிக்காமல் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கு பல்வேறு தீர்ப்புகள் உள்ளன. இதை ஒரு காரணமாக முன்வைத்தால் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாது" எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்பொரு முறை செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "நீர்நிலைகளை மூடி விளை நிலங்களை அழித்து, திட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. மாற்று இடம் குறித்து வல்லுநர்களும் அதிகாரிகளும் ஆய்வு செய்து முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

"மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிராக நாங்கள் இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கு குறித்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் வரவில்லை.

தொழில்துறை அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "விவசாயிகளின் நலன் சார்ந்து திட்டம் ரத்து செய்யப்பட்டது. புதிய விமான நிலையத்துக்கான மாற்று இடம் குறித்து விரைவில் அரசு அறிவிக்கும்" என்று மட்டும் பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு