வானியலாளர்களின் கூற்றுப்படி, பூமிக்கு ஒரு புதிய 'குட்டி நிலவு' கிடைத்துள்ளது.
'2026 QQ8' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறுகோளை, ஹங்கேரியைச் சேர்ந்த வானியலாளர் கிரிஸ்டியன் சார்னெஸ்கி கடந்த ஆகஸ்ட் மாதம் முதன்முதலில் கண்டறிந்தார். இருப்பினும், சர்வதேச வானியல் ஒன்றியத்தின் சிறுகோள் மையம் கடந்த மாதம்தான் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்தச் சிறுகோள் மிகவும் சிறியது. இதன் விட்டம் சுமார் 1 முதல் 2 மீட்டர் வரை இருக்கும். மேலும், இது பூமியிலிருந்து 5 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ளது. இது நிலவு பூமியிலிருந்து இருக்கும் தொலைவைவிட அதிகம்.
பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, தற்காலிகமாக பூமியைச் சுற்றி வரும் சிறிய சிறுகோள்களே 'குட்டி நிலவுகள்' எனப்படுகின்றன.
'2026 QQ8' சிறுகோள் கடந்த ஏப்ரல் மாதம் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, அதைச் சுற்றி வரத் தொடங்கியிருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அடுத்த சில மாதங்களில் பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, மீண்டும் விண்வெளிக்குச் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பூமிக்கு இவ்வாறு தற்காலிகத் துணையாக அமைவது 'குட்டி நிலவுகள்' மட்டுமல்ல.
அரை நிலவுகள்
பூமியின் 'அரை நிலவுகள்' (Quasi-moons) என்று அழைக்கப்படும் சிறுகோள்கள், பூமியிலிருந்து பார்க்கும்போது நிலவைப் போலவே நம்மைச் சுற்றி வருவது போல் தோன்றும். ஆனால், உண்மையில் இவை பூமியைச் சுற்றி வருவதில்லை. சூரியனையே சுற்றி வருகின்றன. அதேவேளையில், பூமியின் சுற்றுப்பாதைக்கு நெருக்கமான பாதையில் நம்முடன் இணையாகப் பயணிக்கின்றன.
இதற்கு அண்மைக்கால உதாரணம் '2025 PN7' என்ற சிறுகோள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்ட இந்தச் சிறுகோள், பல தசாப்தங்களாகப் பூமியின் சுற்றுப்பாதைக்கு நெருக்கமான பாதையில் பயணித்து வருகிறது.
"குவாசி நிலவுகள் சுவாரஸ்யமானவை. ஏனெனில், நமது நிலவு பூமியைச் சுற்றி வருவதைப் போல இவை உண்மையில் பூமியைச் சுற்றி வருவதில்லை. பூமிக்கு அருகாமையில் மட்டுமே பயணிக்கின்றன" என்று வானியலாளர்ஜெனிஃபர் மில்லார்ட் விளக்குகிறார்.
'2025 PN7' சிறுகோள் சுமார் 20 மீட்டர் நீளம் கொண்டது.
"இது மிகப் பெரிய பொருள் அல்ல. ஒரு சிறிய அலுவலகக் கட்டடத்தின் அளவுதான் இருக்கும். கடந்த 60 ஆண்டுகளாக இது பூமியுடன் இணையாகப் பயணித்து வருகிறது. இதன் தற்போதைய சுற்றுப்பாதையைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, இன்னும் 60 ஆண்டுகள் இதேபோல் தொடரும் என்று கருதுகிறோம்" என மில்லார்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.
இருப்பினும், இத்தகைய தற்காலிக வானியல் துணைகள் எதுவும் பூமியின் ஒரே இயற்கைத் துணைக்கோளான நிலவுக்கு ஈடாகாது.
"இந்தச் சிறுகோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அதேசமயம், விண்வெளியில் பூமி பயணிக்கும் பாதைக்கு நெருக்கமான பாதையிலேயே அவையும் செல்கின்றன. பூமிக்கு மிக அருகில் இருப்பதால், அவை நம்மைச் சுற்றி வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் பூமியை முந்திச் செல்கின்றன; வேறு சில நேரங்களில் பூமிக்குப் பின்னால் தங்கிவிடுகின்றன. ஆனால், அவை பூமியின் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்படவில்லை. இதுதான் அவற்றுக்கும் உண்மையான நிலவுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு" என்று அவர் விளக்குகிறார்.
இதுபோன்ற சிறுகோள்கள் தங்கள் சுற்றுப்பாதையில் பயணிக்கும்போது, பூமியின் ஈர்ப்பு விசை அவற்றைச் சற்றே ஈர்த்து, நமது கிரகத்திற்கு அருகில் வரச் செய்கிறது.
இவ்வாறு பூமிக்கு அருகில் பயணிக்கும் அரை நிலவுகள் அனைத்தும் தற்காலிகமானவையே. அவற்றின் சுற்றுப்பாதைகள் சில தசாப்தங்கள் முதல் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலம் வரை நீடிக்கக்கூடும்.
குட்டி நிலவுகள்
இதற்கு மாறாக, 'குட்டி நிலவு' (Mini-moon) என்பது ஒரு கோளைச் சுற்றி வரும் சிறிய விண்வெளிப் பொருளைக் குறிக்கிறது.
பூமியின் குட்டி நிலவுகள், அதன் ஈர்ப்பு விசையால் தற்காலிகமாக ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றி வரும் சிறிய சிறுகோள்கள் ஆகும். இவை சூரியக் குடும்பம் உருவானபோது எஞ்சிய விண்வெளிப் பொருட்களாகவோ அல்லது விண்வெளியில் சிதறிக் கிடக்கும் பிற துகள்களாகவோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பொதுவாக, இவை ஓராண்டுக்கும் குறைவான காலமே பூமியைச் சுற்றி வருகின்றன.
இவை அளவில் மிகவும் சிறியவை என்பதால், கண்டறிவதும் கடினம். விண்வெளி தொடர்பான இலாப நோக்கமற்ற அமைப்பான 'பிளானட்டரி சொசைட்டி' வெளியிட்டுள்ள தகவலின்படி, '2026 QQ8' கண்டறியப்படுவதற்கு முன்பு, இதுவரை நான்கு குட்டி நிலவுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எதுவும் தற்போது பூமியைச் சுற்றி வரவில்லை.
'2026 QQ8'-க்கு முன்பு கடைசியாகக் கண்டறியப்பட்ட குட்டி நிலவு '2024 PT5' ஆகும். 2024 ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்ட இந்தச் சிறுகோள் சுமார் 10 மீட்டர் நீளம் கொண்டது. இது 'அர்ஜுனா சிறுகோள் பட்டை' எனப்படும் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள விண்பொருள்கள், பூமியின் சுற்றுப்பாதையை ஒத்த பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இருப்பினும், '2024 PT5'-இன் வேதியியல் கலவை குறித்த ஆய்வுகள், அது உண்மையில் நிலவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றன. நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு சிறுகோள் நிலவின் மீது மோதியபோது, அதிலிருந்து சிதறி வெளியேறிய ஒரு துண்டாக இது இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சிறுகோள் சில மாதங்கள் மட்டுமே பூமிக்கு அருகில் இருந்துவிட்டு, பின்னர் மீண்டும் விண்வெளியின் தொலைதூரப் பகுதிக்குச் சென்றுவிட்டது. சில வானியலாளர்களின் கணிப்பின்படி, 2055-ஆம் ஆண்டில் இது மீண்டும் பூமிக்கு அருகே கடந்து செல்லக்கூடும்.
பேய் நிலவுகள்
'பேய் நிலவுகள்' (Ghost moons) என்று அழைக்கப்படுபவை, இந்த மூன்று வகைகளிலேயே மிகவும் மர்மமானவை.
இவை பூமியின் சுற்றுப்பாதையில், பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையில் அதற்கு முன்னாலோ அல்லது பின்னாலோ மிதக்கும் தூசு மேகங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், இத்தகைய தூசு மேகங்கள் உண்மையிலேயே இருக்கிறது என்பதில் அறிவியலாளர்களிடையே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இருப்பினும், இந்தக் கருதுகோள் நம்பத்தகுந்ததாகவே இருப்பதாக மில்லார்ட் கருதுகிறார்.
"விண்வெளியில் ஏராளமான தூசுத் துகள்கள் உள்ளன. கோள்களுக்கு இடையே இத்தகைய தூசுத் துகள்கள் பரவிக் கிடப்பதால், பூமியின் சுற்றுப்பாதையில் ஈர்ப்பு விசை சமநிலையாக இருக்கும் புள்ளிகளில் அவற்றில் சில சிக்கிக்கொண்டிருக்கலாம். இதில் எனக்கு எந்த வியப்பும் இல்லை" என்று அவர் கூறுகிறார்.
அரை-நிலவுகள், குட்டி-நிலவுகள் இவற்றில் எது ஆபத்தானது?
வானியல் ரீதியாக இவை அருகிலேயே இருந்தாலும், இவை ஆபத்தையும் ஏற்படுத்தும் அளவுக்கு ஒருபோதும் நெருங்கி வருவதில்லை.
மிக நெருக்கமான நிலையில் இருக்கும்போது கூட, இவை நிலவை விட பல மடங்கு தொலைவிலேயே இருக்கின்றன.
விண்வெளி அளவீடுகளின்படி இது 'அருகில்' என்று கருதப்பட்டாலும், உண்மையில் இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.
"இவை ஏதோ இருளிலிருந்து சீறிக்கொண்டு நம்மை நோக்கி வருவதில்லை" என்று டாக்டர் மில்லார்ட் விளக்குகிறார்.
"ஒருவேளை அவை நம்மை நோக்கி வருவதாக இருந்தால், அது மிக மெதுவான நகர்வாகவே இருக்கும்; அவை வருவதை நம்மால் முன்கூட்டியே காண முடியும், மேலும் அதை எதிர்கொள்வதற்குத் தேவையான போதிய எச்சரிக்கையும் நமக்குக் கிடைக்கும்."
வேறு எந்தக் கோள்களுக்கு அரை நிலவுகள் உள்ளன?
சமீபத்திய தசாப்தங்களில்தான், இத்தகைய மங்கலான, கண்டறிய கடினமான சிறுகோள்களைக் கண்டறியும் அளவுக்கு தொலைநோக்கிகள் மேம்பட்டுள்ளன.
தற்போதைய தொழில்நுட்பத்தால் ஒளிர்மையின் அடிப்படையில் கண்டறியக்கூடிய எல்லைக்கோட்டிலேயே இவை அமைந்துள்ளன.
இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், கணினித் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், இவற்றின் இயக்கங்களை மாதிரியாக்கம் செய்யவும், இந்த மர்மமான பொருட்கள் உண்மையில் 'நிலவு போன்ற துணைக்கோள்கள்' என்பதை உறுதிப்படுத்தவும் உதவியுள்ளது.
"இது ஒன்றும் அசாதாரணமான நிகழ்வு அல்ல; இவற்றை கண்டறிவதுதான் மிகவும் கடினம்," என்று மில்லார்ட் கூறுகிறார்.
"பூமிக்கு அருகிலேயே இவற்றைக் கண்டறிவது கடினம் என்றால், சூரிய குடும்பத்தின் பிற பகுதிகளில் இவற்றைத் தேடுவது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்."
இதுவரை வியாழன், வெள்ளி, சனி, நெப்டியூன் மற்றும் புளூட்டோ ஆகியவற்றைச் சுற்றி இத்தகைய 'நிலவு போன்ற துணைக்கோள்கள்' கண்டறியப்பட்டுள்ளன; எதிர்காலத்தில் இன்னும் பல கண்டறியப்படலாம்.
"சூரிய குடும்பம் இன்றும் மிகவும் சுறுசுறுப்பான, இயக்கம் நிறைந்த ஒரு இடமாகவே உள்ளது," என்று மில்லார்ட் மேலும் கூறுகிறார். "இது உயிரற்ற அல்லது நிலையான ஒன்றல்ல; அனைத்தும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றன."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு