Skip to main content

Advertisement

அமெரிக்காவில் இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவது முடிவுக்கு வருமா? டிரம்பின் புதிய கட்டுப்பாடுகளால் நெருக்கடி

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அமெரிக்கா, கிரீன் கார்டு, இந்தியா, டிரம்ப்
Getty Images
சித்தரிப்புப் படம்

லட்சக்கணக்கான இந்தியர்களைப் பொறுத்தவரை, தங்களின் மிகப்பெரிய தொழில்வாழ்க்கைக் கனவை அடைவதற்கான பாதை ஏற்கெனவே பரிச்சயமான ஒன்றாக இருந்தது. பொறியியல் பட்டம் பெறுவது, தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வது, பின்னர் அந்த நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவது, விசாவை மீண்டும் மீண்டும் புதுப்பிப்பது, இறுதியாக அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான கிரீன் கார்டைப் பெறுவது என்பதுதான் அந்தப் பாதை.

ஆனால், அது விரைவில் முடிவுக்கு வரக்கூடும்.

மைக்ரோசாப்ட், இந்தியாவின் இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட எட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள், பரவலாகப் பயன்படுத்தப்படும் குடியேற்ற நடைமுறையின் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த திறன்மிக்க தொழிலாளர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்துவதற்குத் தடை விதிப்பதாக இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்கா அறிவித்தது.

நிரந்தரப் பணியமர்த்தலுக்கான தொழிலாளர் சான்றிதழ் நடைமுறை அல்லது 'பெர்ம்' (PERM) திட்டத்தின் கீழ் புதிய மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் முடக்கப்பட்டுள்ளன. இது ஹெச்-1பி விசாக்களை (நிபுணர்களுக்கான தற்காலிக விசா) அதிகம் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு ஒரு பெரிய அடியாகும். அமெரிக்காவில் வேலை செய்வதற்கு இந்த விசாவைப் பயன்படுத்தும் அவர்கள், கிரீன் கார்டு மற்றும் இறுதியில் குடியுரிமை பெற 'பெர்ம்' திட்டத்தையே சார்ந்திருக்கின்றனர்.

திறன்சார் தொழிலாளர்களின் குடியேற்ற விதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்ற டிரம்பின் நிலைப்பாட்டிற்கு ஏற்பவே இந்த சமீபத்திய அறிவிப்பு அமைந்துள்ளது. இதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களை ஏற்கெனவே பழக்கப்படுத்திக் கொண்டுள்ளதால், வணிகங்கள் மீதான இதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய நிறுவனங்கள் ஹெச்-1பி விசாக்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளன என்றும், உள்ளூரிலேயே அதிக அளவில் ஆட்களைப் பணியமர்த்தி வருகின்றன என்றும் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியத் தொழில்நுட்பத் துறையின் வர்த்தகக் கூட்டமைப்பான நாஸ்காம் (Nasscom) கூறுகிறது.

"இதன் விளைவாக, ஹெச்-1பி விசாவில் இருந்து பெர்ம் நடைமுறையின் மூலம் நிரந்தர வதிவிட அந்தஸ்தைப் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது," என்று அந்தக் கூட்டமைப்பு கூறுகிறது.

அமெரிக்கா, கிரீன் கார்டு, இந்தியா, டிரம்ப்
Getty Images
ஹெச்-1பி பணியாளர்கள் குறித்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் கருத்துகள், அமெரிக்கக் குடியேற்றக் கொள்கை தொடர்பான கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன.

கட்டுப்பாடுகளின் தாக்கம்

அமெரிக்காவில் உள்ள தங்களது பணியாளர்களில் 80%-க்கும் அதிகமானோர் உள்ளூரிலேயே பணியமர்த்தப்பட்டவர்கள் என விப்ரோ நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களின் 'பெர்ம்' விண்ணப்பங்கள் ஒற்றை இலக்கத்திலேயே இருந்ததாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தெரிவித்துள்ளது. புதிய தொழிலாளர்களை வெளிநாடுகளிலிருந்து அழைத்து வருவதைக் காட்டிலும், ஏற்கெனவே பணியாற்றிவரும் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே பெரும்பாலும் ஹெச்-1பி விசா மனுக்களைத் தாக்கல் செய்ததாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

'பெர்ம்' டிராக்கரை மேற்கோள்காட்டி பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், டிசிஎஸ்-இன் விண்ணப்பங்கள் முந்தைய ஆண்டின் 513 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டின் 1,804 என்ற எண்ணிக்கையில் இருந்து 2025-26-ஆம் ஆண்டில் இரண்டாகக் குறைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

2025-26-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களுக்கு எவ்விதப் பதிவுகளும் காணப்படவில்லை என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இந்தக் கட்டுப்பாடுகளின் தாக்கம் குறித்தும், அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு நிறுவனங்கள் எவ்வாறு ஆதரவளிக்கின்றன என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பி, பிபிசி அனுப்பிய மின்னஞ்சலுக்கு அந்த எட்டு நிறுவனங்களுமே எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

'பெர்ம்' தொடர்புடைய வேலைகள் வருவாயில் ஒரு சிறிய பங்கை மட்டுமே கொண்டுள்ளன என்பதால், அதிகச் சம்பளம் வாங்கும் அமெரிக்கத் தொழிலாளர்கள் அவர்களுக்குப் பதிலாகப் பணியமர்த்தப்பட்டாலும், தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும் என பங்குத் தரகு நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்க அரசாங்கத்தின் இந்த முடிவு வணிகத்தைத் தாண்டிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவில் உள்ள இந்த எட்டு நிறுவனங்களில் ஒன்றில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர், தனது பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் பிபிசியிடம் பேசுகையில், இந்தப் புதிய பெர்ம் கட்டுப்பாடு "நிறுவனத்தின் வணிகத்தைச் சீர்குலைத்துவிடாது" என்றும், ஆனால் மனிதர்களின் வாழ்க்கையில் இதன் தாக்கம் மிகவும் "தீவிரமானதாக" இருக்கும் என்றும் தெரிவித்தார்.

"எங்களுக்குத் தெரிந்த பலரும் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் கிரீன் கார்டு விண்ணப்பங்கள் தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளனர். அவர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பத் தயாராக இருந்தாலும், அவர்களின் குழந்தைகள் இங்கேயே வளர்ந்துவிட்டதால் அவர்கள் செல்ல விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.

சமீபத்திய கொள்கை முடிவுகள் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளன; இந்தியக் குடியேறிகள் மற்றும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு எதிரான இணையவழி வெறுப்புணர்வையும் தீவிரப்படுத்தியுள்ளன.

ஆசிய மற்றும் பசிபிக் தீவு மக்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்துப் போராடும் அமெரிக்காவைச் சேர்ந்த 'ஸ்டாப் ஏஏபிஐ ஹேட்' (Stop AAPI Hate) என்ற லாப நோக்கற்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், 2024 அமெரிக்கத் தேர்தலுக்குப் பிறகு தெற்காசியர்களுக்கு எதிரான இணையவழி வெறுப்புணர்வு பெருமளவில் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். இதில் இந்தியக் குடியேறிகள் மற்றும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களே அடிக்கடி இலக்காகிறார்கள்.

அந்த எட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 'பெர்ம்' திட்டத்திற்குத் தடை விதித்ததோடு, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஹெச்-1பி விசா வைத்துள்ள வெளிநாட்டு நிபுணர்களை "வெளிநாட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள்" என்று குறிப்பிட்டார்.

பின்னர் தனது சொற்பிரயோகம் "குறைபாடுடையது" என்பதை அவர் ஒப்புக் கொண்டாலும், காலனித்துவக் காலத்தை நினைவுபடுத்தும் அந்த வார்த்தைகள் "தேவையற்றவை" என்றும் "ஆழமாகப் புண்படுத்தக் கூடியவை" என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.

சிறந்த எதிர்கால வாய்ப்புகளைத் தேடி பலர் அமெரிக்காவிற்கு வந்ததாகவும், அங்கு படிப்பதற்கும் தொழில்வாழ்க்கையை உருவாக்குவதற்கும் அதிக அளவில் கடன் வாங்கியதாகவும் உலகளாவிய குடியேற்றச் சட்ட நிறுவனமான லாகுவெஸ்ட்டின் நிறுவனரும் நிர்வாகப் பங்குதாரருமான பூர்வி சோதானி கூறினார்.

ஆனால் தற்போது விதிகள் கடுமையாக்கப்பட்டு வருவதால், அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறைந்துள்ளதுடன், அதனால் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்கும் திறனும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிரந்தர வசிப்பிட அனுமதியைப் பெறுவதற்கான வழிகள் சுருங்கி வருவதால், சிலர் அமெரிக்காவில் தங்களின் எதிர்காலம் குறித்து மறுபரிசீலனை செய்யலாம், இன்னும் சிலர் அங்கு செல்வதையே தவிர்க்க முடிவெடுக்கலாம் என குடியேற்றத் துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

'நிரந்தர வசிப்பிட அனுமதியைப் பெற மாற்று வழிகள் இருந்தாலும், அவற்றில் பல சாத்தியமானதாக இருக்காது' என்று ஸ்டான்போர்டு குடியேற்றக் கொள்கை ஆய்வகத்தில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வாளராகப் பணியாற்றும் அஹ்மத் குலெக் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தத் தடையின்கீழ் வராத வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறுவது ஒரு தீர்வாக இருந்தாலும், "பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சம்" காரணமாக அந்த நிறுவனங்கள் குடியேறிகளைப் பணியமர்த்த முன்வருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தவிர, வேலை மாறுவதற்கும் இது ஒரு கடினமான காலகட்டமாகும்.

அமெரிக்கா, கிரீன் கார்டு, இந்தியா, டிரம்ப்
Getty Images
அமெரிக்காவின் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு நிலுவைப் பட்டியலில் இந்தியர்களே அதிகம் உள்ளனர்.

பணிநீக்கங்கள், செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் விரைவான பயன்பாடு ஆகியவற்றால் தொழில்நுட்பத் துறையின் வேலைவாய்ப்புச் சூழல் ஏற்கெனவே மாறியுள்ளது; இது தொழில்ரீதியாக வேலையை மாற்றுவதை மேலும் கடினமாக்குகிறது.

ஆனால், அமெரிக்கக் கிரீன் கார்டு பெறுவதற்கு வேறு வழிகளும் உள்ளன. அசாதாரண சாதனைகளைப் புரிந்தவர்கள் அல்லது தேச நலனை மேம்படுத்தும் பணிகளில் இருப்பவர்கள் 'பெர்ம்' தொழிலாளர் சான்றிதழ் செயல்முறையைத் தவிர்த்து, மாற்று வழிகள் மூலம் தகுதி பெறலாம்.

தகுதியான அமெரிக்கத் தொழில் நிறுவனங்களில் குறைந்தது 8 லட்சம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 7 கோடியே 59 லட்சம் ரூபாய்) முதலீடு செய்வதன் மூலம், விண்ணப்பதாரர்கள் நிரந்தர வதிவிட அனுமதி பெறுவதற்குத் தகுதி பெறலாம்.

இவற்றில் சில பிரிவுகளும் "அடுத்து இலக்காகலாம்" என்று குலெக் எச்சரிக்கிறார்.

அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும் என்பதில் சிலர் மிகவும் ஆர்வமாக உள்ளதால் அவர்கள் EB-5 முதலீட்டாளர் வழியைக் கருத்தில் கொள்கிறார்கள், ஆனால் முதலீடு செய்வதற்குப் போதுமான மூலதனம் அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம் என்று சோதானி கூறுகிறார்.

'அமெரிக்கக் கொள்கைகளுக்கான தேசிய அறக்கட்டளை' (என்.எஃப்.ஏ.பி) அமைப்பின் தகவல்படி, 2025 டிசம்பர் நிலவரப்படி சுமார் பத்து லட்சம் இந்தியர்கள் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுகளுக்காகக் காத்திருந்தனர். இது நிலுவையில் உள்ள மொத்த விண்ணப்பங்களில் 79% ஆகும்.

விசா வகையைப் பொறுத்து, 2026 ஜனவரி முதல் தொழிலாளர் சான்றிதழ் அல்லது வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்ற மனுக்களைத் தாக்கல் செய்யும் உயர் திறன் கொண்ட இந்தியத் தொழில் வல்லுநர்கள் இந்தியர்களுக்கான காத்திருப்பு காலம் 5 முதல் 179 ஆண்டுகள் வரை இருக்கும் என அவர்களின் அறிக்கை மதிப்பிடுகிறது.

சமீபத்திய பிற குடியேற்ற நடவடிக்கைகளைப் போலவே, 'பெர்ம்' இடைநீக்கமும் அமெரிக்க மத்திய நீதிமன்றங்களில் சட்டரீதியான சவால்களைச் சந்திக்க நேரிடலாம். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்த நகர்வுகள் அமெரிக்காவில் படிக்க, வேலை செய்ய அல்லது குடியேற விரும்புபவர்களுக்கு மிகவும் கட்டுப்பாடான ஒரு சூழலையே சுட்டிக்காட்டுகின்றன.

முன்னதாக, சில புதிய ஹெச்-1பி விசா மனுக்களுக்கு டிரம்ப் நிர்வாகம் 1,00,000 டாலர் கட்டணத்தை விதித்தது. இந்த நடவடிக்கை பின்னர் ஃபெடரல் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டது.

சமீபத்தில், சர்வதேச மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு நாட்டில் வேலை செய்ய அனுமதிக்கும் ஒரு திட்டத்திற்காக அவர்களைப் பரிந்துரைக்கும் பல்கலைக் கழகங்களுக்கு 70,000 டாலர் கட்டணத்தையும் டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

"நீண்ட காத்திருப்புக்குப்" பிறகு சமீபத்தில் ஹெச்-1பி விசாவிற்கு மாறிய இந்தியத் தொழில்முறை நிபுணர் ஒருவர், பெயர் தெரிவிக்க விரும்பாத நிலையில் பிபிசியிடம் பேசுகையில், "இந்த நிலைமை இப்போதைக்கு மாறப்போவதில்லை," என்று கூறினார்.

குடியேற்றச் சட்டங்களைச் சீர்திருத்த வேண்டும் என்பதை குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டுமே ஒப்புக்கொள்கின்றன, ஆனால் அதனை எப்படிச் செய்வது என்பதில்தான் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது என்று அவர் கூறுகிறார்.

இந்தக் கட்டுப்பாடுகளால் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்குப் பதிலாக, அந்த வேலைகள் இந்தியாவுக்கு மாற்றப்படக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிறுவனங்கள் ஏற்கெனவே அதிக அளவில் பணிகளை வெளிநாடுகளுக்கு மாற்றி வருவதாகத் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுவதும் இந்தக் கருத்தை வலுப்படுத்துகிறது.

"நிறுவனங்கள் தங்களது பணிகளை வெளிநாட்டிற்கு மாற்றும்போது, குறைவான செலவு என்ற பலனைப் பெறுகின்றன. கொரோனாவிற்குப் பிறகு, வாடிக்கையாளர்களிடம் இருந்தும் 'ரிமோட் வொர்க்' முறைக்கு அதிக வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது," என்று முன்பு மேற்கோள் காட்டப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.

இந்தியத் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான அமெரிக்காவின் தேவை முற்றிலும் மறைந்துவிட வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், அந்தத் திறமையை அமெரிக்கா எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறது என்பதில் மாற்றம் ஏற்படக்கூடும். இந்தியத் தொழில்நுட்பத் துறை வல்லுநர்களைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் தங்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்து இதுவரை கொண்டிருந்த திட்டங்களையே மாற்றியமைக்க வேண்டியிருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு