Skip to main content

Advertisement

ஆன்லைனில் துப்பறியும் ஆட்டம் ஆடிய சிறுவன் தாயுடன் சேர்ந்து காணாமல் போன சிறுமியை மீட்க உதவிய கதை

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
16 வயதான லாண்டன் ட்ரெஸ்ப் (இடது), அமங் அஸ் என்ற ஆன்லைன் விளையாட்டில் அந்தச் சிறுமியைச் சந்தித்தார். பின்னர், காணாமல்போன அந்தச் சிறுமியின் நிலை குறித்து தனது 41 வயதான தாய் கிறிஸ்டினாவிடம் தெரிவித்தார்.
Submitted photo
16 வயதான லாண்டன் ட்ரெஸ்ப் (இடது), அமங் அஸ் என்ற ஆன்லைன் விளையாட்டில் அந்தச் சிறுமியைச் சந்தித்தார். பின்னர், காணாமல் போன அந்தச் சிறுமியின் நிலை குறித்து தனது 41 வயதான தாய் கிறிஸ்டினாவிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 16 வயதான லாண்டன் ட்ரெஸ்ப், கொலராடோ மலைப்பகுதியில் உள்ள தனது குடும்ப வீட்டின் படுக்கையறையில் இருந்தார். அன்றாட வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஆன்லைன் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தபோது, தனது மடிக்கணினியில் மற்றொரு வீரருடன் அவர் உரையாடத் தொடங்கினார்.

அந்த நபர் ஒரு பதின்ம வயது சிறுமி. இருவருக்கும் இடையே உடனடியாக நல்ல புரிதல் ஏற்பட்டது என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

அந்தப் பெண்ணின் பெயர் தனக்குப் பிடித்திருப்பதாக லாண்டன் கூறினார். அது உண்மையான பெயர் அல்ல, வேறு பெயர் என்று அந்தப் பெண் தெரிவித்தார். தான் வீட்டைவிட்டு ஓடிவந்த சிறுமி என்றும், தனது வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவில், தனக்கு விருப்பமில்லாத வகையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், தான் எங்கு இருக்கிறோம் என்பது அவருக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. அந்த 17 வயதுச் சிறுமி காணாமல் போய் ஓராண்டுக்கும் மேலாகியிருந்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த லாண்டன், "என்ன செய்வதென்று தெரியாமல் கையறு நிலையில் இருந்ததாக" கூறுகிறார். இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து உரையாடி மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொண்ட பிறகு, இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தனது தாய் கிறிஸ்டினாவிடம் தெரிவிக்க அவர் முடிவு செய்தார். 41 வயதான செவிலியரும் ஐந்து குழந்தைகளின் தாயுமான கிறிஸ்டினா, ஹாலோவீன் நிகழ்ச்சிக்காகத் தனது இளைய குழந்தைகளுக்கு ஒப்பனை செய்து கொண்டிருந்த போது லாண்டன் அவரிடம் விவரங்களைத் தெரிவித்தார்.

அந்தச் சம்பவம் அந்தத் தாயையும் மகனையும் அவரது தோழியை கண்டறியவும், அந்தச் சிறுமியின் தாயாரைத் தொடர்பு கொள்ளவும், எஃப்.பி.ஐ (FBI) உடன் இணைந்து செயல்படவும் தூண்டியது — இறுதியில், லாண்டன் அந்தச் சிறுமியின் இக்கட்டான நிலை குறித்து தன் தாயிடம் முதலில் தெரிவித்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, அந்தப் பதின்ம வயதுச் சிறுமி மீட்கப்படுவதை அவர்கள் நேரில் காண முடிந்தது.

"உதவி கேட்டு கையை நீட்டுவதற்கு அவளுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருந்தது. அவள் என்னைத் தேர்ந்தெடுத்தாள்," என்று காணாமல் போன போது 15 வயதாக இருந்த அந்தச் சிறுமி குறித்து கிறிஸ்டினா கூறுகிறார்.

கிறிஸ்டினா அந்தச் சிறுமியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்கீரின் ஷாட் இது. தன்னைத் தடுத்து வைத்திருந்த நபர் தலையணைக்கு அடியில் வைத்திருந்த கத்தியைக் காட்டியபோது இந்தப் படம் எடுக்கப்பட்டது.
Khristina Tresp
கிறிஸ்டினா அந்தச் சிறுமியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்கீரின் ஷாட் இது. தன்னைத் தடுத்து வைத்திருந்த நபர் தலையணைக்கு அடியில் வைத்திருந்த கத்தியைக் காட்டியபோது இந்தப் படம் எடுக்கப்பட்டது.

அந்தச் சிறுமியுடனான உரையாடல்களின் ஸ்கிரின் ஷாட்களையும், குற்றப் புகாரில் இடம்பெற்றுள்ள புகைப்படத்துடன் பொருந்தும் ஒரு படத்தையும் தங்களுடைய கதையை உறுதிப்படுத்துவதற்காக ட்ரெஸ்ப் குடும்பத்தினர் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.

மீட்கப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில், 'ஜென்னி' என்று அழைக்கப்படும் அந்தச் சிறுமி குறித்து லாண்டன் முதன்முதலில் தனது தாயிடம் தெரிவித்தார். அந்தச் சிறுமியின் உண்மையான அடையாளத்தை பிபிசி வெளியிடவில்லை.

"ஆன்லைனில் ஒரு பெண்ணைச் சந்தித்திருப்பதாகவும், அவள் மிகவும் இனிமையானவள் என்றும், அவளுடன் பேசி ஒரு வாரம் ஆகியிருக்கும் போது அவன் என்னிடம் கூறியிருந்தான்," என்கிறார் கிறிஸ்டினா. "திரைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எப்போதும் உனக்குத் தெரியாது" என்று தான் லாண்டனை எச்சரித்ததாகவும் அவர் கூறுகிறார்.

"அவள் மிகவும் கடினமான சூழலில் இருக்கிறாள். ஒரு நண்பரைத் தேடுகிறாள்," என்று லாண்டன் தனது தாயிடம் கூறியிருந்தார்.

ஆனால், ஜென்னி தனது நிலைமையைப் பற்றி மேலும் விவரங்களைத் தெரிவித்த போது லாண்டனின் கவலை அதிகரித்தது.

அமங் அஸ் என்ற விளையாட்டை விளையாடிய போதுதான் இருவரும் சந்தித்தனர். இந்த விளையாட்டை "ஆன்லைனில் விளையாடும் ஒரு வகையான துப்பறியும் விளையாட்டு" என்று லாண்டன் விவரிக்கிறார்.

தான் வீட்டைவிட்டு ஓடிவந்ததாக லாண்டனிடம் தெரிவித்த 'ஜென்னி', வயதான ஒருவர் தன்னை மாகாண எல்லைகளைக் கடந்து அழைத்துச் சென்றதாகவும், தன்னை வெளியே செல்ல விடவில்லை என்றும் கூறினார். அவர் காணாமல் போனது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். தான் காணாமல் போனது குறித்த செய்திகளுக்கான இணைப்புகளையும் லாண்டனுக்கு அனுப்பினார். ஆனால், காவல்துறையினர் தன்னைத் தற்போது தேடவில்லை என்று அவர் நம்பினார்.

ஜென்னி அச்சத்திலும் விரக்தியிலும் இருந்தார். அதனால்தான் லாண்டன் தனது தாயிடம் இதைக் கூறினார்.

தாய்மையுணர்வுடன் உடனடியாகச் செயல்பட்ட கிறிஸ்டினா, தகவல் பரிமாற்றத் தளமான டிஸ்கார்டு வழியாக ஜென்னியைத் தானே தொடர்புகொண்டார்.

அந்த உரையாடலின்போது, தனது வாழ்க்கையில் பல ஆண்டுகளாகத் துன்புறுத்தல்களையும் ஏராளமான பிரச்னைகளையும் சந்தித்திருப்பதாக ஜென்னியிடம் கூறியதாக கிறிஸ்டினா தெரிவித்தார்.

சில மணி நேரத்திற்குள் ஜென்னி, கிறிஸ்டினாவை "அம்மா" என்று அழைக்கத் தொடங்கினார்.

அமங் அஸ் என்ற ஆன்லைன் விளையாட்டின் ஃபன்கெல் பகுதியில் இடம்பெறும் காட்சியின் ஸ்கீரின் ஷாட்.
Innersloth LCC
அமங் அஸ் விளையாட்டை வெவ்வேறு சாதனங்களில் 4 முதல் 15 பேர் வரை ஆன்லைனில் இணைந்து விளையாடலாம்.

காணாமல் போனவர்கள் குறித்த செய்திக் கட்டுரைகளைப் படித்தபோது, நிலைமை மிகவும் தீவிரமானது என்பதை கொலராடோவைச் சேர்ந்த அந்த தாய் உணர்ந்தார். தான் ஒரேகான் மாகாணத்தில் இருப்பதாகவும், அங்குள்ள ஒரு நகரத்தின் பெயரையும் ஜென்னி தெரிவித்தார். ஆனால், தன்னை எங்கு தடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. தனக்கு மேலும் விவரங்கள் தேவை என்பதை கிறிஸ்டினா உணர்ந்தார். அந்த வீட்டில் முழுப் பெயர் இடம்பெற்றிருக்கும் அஞ்சல் கடிதம் அல்லது வேறு ஏதேனும் ஆவணத்தைக் கண்டுபிடிக்குமாறு ஜென்னியிடம் அவர் கூறினார். அந்தச் சிறுமியும் அவ்வாறே செய்தார்.

"அப்போதுதான் நான் வேலையில் இறங்கினேன்," என்கிறார் கிறிஸ்டினா. அவர் வரி மற்றும் சொத்துப் பதிவுகளை ஆராயத் தொடங்கினார்.

கிறிஸ்டினா பல முகவரிகளைக் கண்டறிந்தார். பின்னர், அவற்றை ஒரு ரியல் எஸ்டேட் இணையதளத்தில் தேடி, அந்த இடங்களின் புகைப்படங்களைக் கண்டுபிடித்தார். அந்தப் புகைப்படங்களை ஜென்னியிடம் காட்டினார். இரண்டாவது புகைப்படத்தில் காட்டப்பட்ட வீட்டில்தான் தன்னைத் தடுத்து வைத்திருப்பதாக ஜென்னி உறுதிப்படுத்தினார்.

"அதற்குப் பிறகு அவள் என்னிடம் கேட்டது, அவளைத் தடுத்து வைத்திருக்கும் நபர் வீட்டில் இல்லாதவரை இதைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்பதுதான். அந்த வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாகவும், தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும் அவள் கூறினாள்," என்கிறார் கிறிஸ்டினா.

மறுநாள் காலையில் அந்த நபர் வீட்டைவிட்டுச் சென்றதும், விளையாட்டுத் தளத்தின் மூலம் மீண்டும் தன்னை அழைப்பதாக ஜென்னி கிறிஸ்டினாவிடம் உறுதியளித்தார். இதற்கிடையில், காணாமல்போன அந்தச் சிறுமியின் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டிருந்த சட்ட அமலாக்க அமைப்பைத் தேடத் தொடங்கினார் கிறிஸ்டினா. சமூக ஊடகங்கள் வழியாக ஜென்னியின் தாயைத் தொடர்புகொண்டார். அவருடன் தொலைபேசியில் சிறிது நேரம் பேசினார். அதன்பிறகு ஒரு எஃப்.பி.ஐ. அதிகாரியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.

"அவள் உயிருடன் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கிறிஸ்டினாவிடம் அந்த எஃப்.பி.ஐ. அதிகாரி கேட்டார்.

"நான் பார்த்திருக்கிறேன். அவளுடன் காணொளி அழைப்பில் பேசினேன். அவளைப் பார்த்தேன் என்று நான் கூறினேன். அதைக் கேட்ட அவர், 'ஓ கடவுளே, இதையெல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை' என்றார்," என்று அந்த உரையாடலை நினைவுகூர்கிறார் கிறிஸ்டினா.

தன்னை தடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர் வீட்டைவிட்டுச் சென்ற பிறகு, ஜென்னி மீண்டும் கிறிஸ்டினாவை அழைத்தார். அப்போது அவர்களுடைய உரையாடலை எஃப்.பி.ஐ. கண்காணித்தது. குற்றப்புகாரில் இடம்பெற்றுள்ள அந்த உரையாடல் பதிவின்படி, 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் சமூக ஊடகங்கள் வழியாக ஆடம் ஹண்டர் ஹார்மெல் என்பவரைச் சந்தித்ததாக ஜென்னி விளக்கினார்.

தனக்கு குறைபாடு இருப்பதாகவும், தனது இடுப்புப் பகுதியில் "பிரச்னைகள்" இருப்பதாகவும் அவர் ஜென்னியிடம் கூறியிருந்தார். தன்னை ஒரேகானுக்கு அழைத்துச் செல்ல உதவினால் பணம் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், யூட்டா மாகாணத்தில் இருந்து ஜென்னியை அழைத்துச் சென்ற பிறகு, ஜென்னியின் கைப்பேசியை அவர் ஆற்றில் வீசியெறிந்தார். ஜென்னியை ஒரேகானுக்கு அழைத்துச் சென்று அடித்தள அறையில் தடுத்து வைத்தார். தனது படுக்கையில் சுவரை ஒட்டியபடி தூங்குமாறு ஜென்னியைக் கட்டாயப்படுத்தினார். தலையணைக்கு அடியில் ஒரு கத்தியையும் வைத்திருந்தார். தொலைபேசி அழைப்புகளைச் செய்ய முடியாத, ஆனால் வைஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்தக் கூடிய ஒரு கைப்பேசியை ஜென்னிக்கு அவர் கொடுத்திருந்தார். அதன் மூலம்தான் அவர் ஆன்லைன் விளையாட்டை விளையாடினார்.

39 வயதான அந்த நபர் "வன்முறையாகவும் ஆக்ரோஷமாகவும் நடந்துகொள்வார்" என்று குற்றப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஜென்னியைத் தாக்கியதும், பாலியல் வன்கொடுமை செய்ததும் அடங்கும்.

ஜென்னியை அடையாளம் காண முடியாமல் இருப்பதற்காக, அவரது பற்களில் பொருத்தப்பட்டிருந்த பிரேஸ்களை இடுக்கியைப் பயன்படுத்தி அகற்றுமாறு அவர் கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காணாமல்போன சிறுமி ஓரிகனில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்' என்று தெரிவிக்கும் எஃப்.பி.ஐ. செய்திக்குறிப்பு
FBI handout
காணாமல் போன சிறுமி ஒரேகானில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்' என்று தெரிவிக்கும் எஃப்.பி.ஐ. செய்திக்குறிப்பு

கிறிஸ்டினாவும் எஃப்.பி.ஐ. அதிகாரிகளும் இந்த விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்த போது, சிறுமி இருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவரைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

ஹார்மெல் வீட்டில் இல்லாதபோது, காவல்துறை அதிகாரிகள் அந்தத் தெருவுக்கும் குறிப்பிட்ட முகவரிக்கும் அனுப்பப்பட்டனர். இதற்கிடையில், ஜென்னி அங்கிருந்து தப்பிச் செல்வதற்கான தயாரிப்புகளை கிறிஸ்டினா செய்துகொண்டிருந்தார்.

இதற்கு முன்பும் தப்பிச் செல்ல முயன்றதாக, கிறிஸ்டினாவிடம் ஜென்னி தெரிவித்திருந்தார்.

"சட்ட அமலாக்க அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனர். 'இன்னும் ஒன்பது நிமிடங்களில் சென்றுவிடுவோம், இன்னும் ஏழு நிமிடங்களில் சென்றுவிடுவோம்' என்று எனக்குத் தொடர்ந்து தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தனர்," என்கிறார் கிறிஸ்டினா. அவர் அந்த நேரம் முழுவதும் ஜென்னியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். லாண்டனும் அருகில் அமர்ந்திருந்தார்.

ஜென்னி இருந்த வீட்டுக்குள் மற்றவர்களின் குரல்களையும் கிறிஸ்டினாவால் கேட்க முடிந்தது. அங்கு என்ன நடக்கிறது என்பதை யாராவது தெரிந்துகொண்டு, அந்தச் சிறுமிக்குத் தீங்கு விளைவித்து விடுவார்களோ என்று அவர் அஞ்சினார்.

ஆனால், தனது அச்சத்தை ஜென்னியிடம் வெளிப்படுத்தாமல் இருந்தார்.

"என்னுடன் சேர்ந்து மூன்று முறை ஆழமாக மூச்சை இழுத்துவிடு," என்று அந்தச் சிறுமியிடம் அவர் கூறினார்.

"ஒரு காவல்துறை அதிகாரி என்னிடம் செல்லலாம் என்று கூறி, அந்தத் தகவலை நான் உன்னிடம் தெரிவித்ததும், அந்தப் படிக்கட்டுகளில் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓட வேண்டும். அந்த அடித்தளக் கதவைத் திறந்து வெளியே வா.

"அந்த வழித்தடத்தில் தொடர்ந்து சென்று, முன்பக்கக் கதவைத் திற. எதற்காகவும் நிற்காதே."

அந்தச் சிறுமி ஓடிச் சென்று மாகாண காவல்துறை அதிகாரி ஒருவரிடம் தஞ்சமடைந்ததைத் தாயும் மகனும் மூச்சைப் பிடித்துக் கொண்டு பார்த்தனர்.

ஹார்மெல் தற்போது பெடரல் காவலில் உள்ளார். பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நோக்கத்துடன் ஒருவரைக் கடத்திச் சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜென்னி காணாமல் போவதற்கு முந்தைய சில மாதங்களில், ஆறு வயதுச் சிறுமி ஒருவரை அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்ததாக உள்ளூர் ஒரேகான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

விசாரணைக்காகக் காத்திருக்கும் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கருத்து கேட்டு பிபிசி அனுப்பிய கோரிக்கைக்கு குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் பதிலளிக்கவில்லை.

இதற்கிடையில், ஜென்னி தற்போது கிறிஸ்டினா மற்றும் லாண்டனுடன் தினமும் தொடர்பில் இருக்கிறார். லாண்டன் இன்னமும் அவருடன் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி மகிழ்கிறார்.

"தனக்காக அக்கறை கொள்ள யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதை அவள் உணர வேண்டும் என்பதற்காகவே, சில நேரங்களில் நாங்கள் வெறுமனே காணொளி அழைப்பில் அமர்ந்திருப்போம்,' என்று கிறிஸ்டினா கூறுகிறார்.

'நேற்று இரவு நான் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்த போதும் அவள் வீடியோ அழைப்பில் இருந்தாள். அவளுக்கு ஒரு மோசமான நாளோ அல்லது கடினமான தருணமோ ஏற்படும் போது, அவளால் உடனடியாக என்னையோ அல்லது லாண்டனையோ அழைக்க முடியும் என்பதை அறிவது மகிழ்ச்சியாக இருக்கிறது.'

"அவள் சந்தித்தவற்றைக் கருத்தில் கொண்டால், இப்போது நன்றாகவே இருக்கிறாள்."

அவர்கள் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. ஆனால், அதை சாத்தியப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

"விரைவில் அவரைக் கட்டியணைக்க முடியும் என்று நம்புகிறேன்," என்கிறார் கிறிஸ்டினா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு