Skip to main content

Advertisement

ஹிட்லரின் மலை உச்சி ஓய்விடத்தில் திடீர் தீ - என்ன நடந்தது?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சனிக்கிழமை அதிகாலையிலும் 'ஈகிள்ஸ் நெஸ்ட்' எரிந்து கொண்டிருந்தது.
Getty Images
சனிக்கிழமை அதிகாலையிலும் 'ஈகிள்ஸ் நெஸ்ட்' எரிந்து கொண்டிருந்தது.

ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள பவேரியா மாகாணத்தில், அடால்ஃப் ஹிட்லரின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி ஓய்விடத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

'ஈகிள்ஸ் நெஸ்ட்' என்று அழைக்கப்படும் இந்த ஓய்விடம், கெல்ஸ்டைன்ஹவுஸ் (Kehlsteinhaus) என்ற பெயரிலும் அறியப்படுகிறது.

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9.15 மணிக்கு (GMT நேரப்படி இரவு 7.15 மணி), டிரான்ஸ்டைன் நகரில் உள்ள அவசரகாலக் கட்டுப்பாட்டு மையத்துக்கு அந்தக் கட்டடத்தில் இருந்து தீ விபத்து எச்சரிக்கை வந்தது.

இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினர், கட்டடம் முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததைக் கண்டனர்.

மலைப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு காரணமாகத் தீயை அணைக்கும் பணிகளில் சிரமம் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சனிக்கிழமை அதிகாலை வரையிலும் தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருந்ததாகவும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் சுமார் 200 அவசரகாலப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.

பெர்ச்டெஸ்காடன் நகருக்கு மேலே மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஓய்விடத்தை, நாஜி சர்வாதிகாரியான ஹிட்லர் அவ்வப்போது அரசாங்க நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் இடமாகப் பயன்படுத்தினார்.

1941ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காகத் தனது ராணுவத் தளபதிகளையும் ஹிட்லர் இந்த இடத்தில் சந்தித்தார்.

விலங்குகள் மற்றும் இயற்கையின் மீது அன்பு கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட நாஜி பிரசாரத் திரைப்படங்களுக்கான பின்னணியாகவும் ஹிட்லர் இந்த மலைப்பகுதியைப் பயன்படுத்தினார்.

தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்துக்கும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கும் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறியக் குற்றவியல் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஈகிள்ஸ் நெஸ்ட் (கோப்புப் புகைப்படம்)
Getty Images
ஈகிள்ஸ் நெஸ்ட் (கோப்புப் புகைப்படம்)

1938ஆம் ஆண்டு நாஜிக்களால் கட்டி முடிக்கப்பட்ட ஈகிள்ஸ் நெஸ்ட் ஓய்விடம், 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் தோல்வியடைந்தபோது அழிவிலிருந்து தப்பியது.

அதன் பின்னர், இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாக மாறியது. இங்கு மலைப்பகுதி உணவகமும் செயல்பட்டு வருகிறது.

நாஜி சர்வாதிகார ஆட்சியின் கொடூரங்களை நினைவூட்டும் எச்சரிக்கைச் சின்னமாக இந்த இடம் திகழ்வதாக, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது, ஐரோப்பிய யூதர்கள் பெருமளவில் திட்டமிட்டுக் கொல்லப்பட்டது உட்பட, கோடிக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளுக்கு ஹிட்லரும் அவரது ஆதரவாளர்களும் காரணமாக இருந்தனர்.

ஓரினச்சேர்க்கையாளர்கள், ரோமா சமூகத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்கள் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

ஹிட்லருடன் தொடர்புடைய கட்டடங்களைப் பாதுகாப்பதா, வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதா அல்லது இடித்துத் தள்ளுவதா என்பது குறித்து ஜெர்மனியிலும் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவிலும் விரிவான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

வரலாற்றுக் காரணங்களுக்காக இத்தகைய கட்டடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சிலர் வலியுறுத்துகின்றனர்.

ஆனால், இந்தக் கட்டடங்கள் நவ நாஜிக்கள் மற்றும் தீவிர வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நினைவுச் சின்னங்களாகக் கருதும் இடங்களாகவோ, அவர்கள் சென்று வழிபடும் இடங்களாகவோ மாறக்கூடும் என்று மற்றவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூன் மாதம், ஹிட்லரின் பதுங்கு குழிகளில் ஒன்றை இடித்துவிட்டு, அந்த இடத்தில் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களைக் கட்டப்போவதாக பெர்லின் அதிகாரிகள் அறிவித்தனர்.

அந்தப் பதுங்கு குழி, அப்போது 'நாஜி ஜெர்மனியின் அதிகார மையம்' என்று விவரிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை விமர்சித்தவர்கள், அந்தப் பதுங்கு குழிக்கு 'முக்கியமான வரலாற்று மதிப்பு' இருப்பதாகக் கூறினர்.

அதை இடிப்பதற்குப் பதிலாக, இரண்டாம் உலகப் போரின் முடிவைப் பற்றிய கண்காட்சியுடன் கூடிய அருங்காட்சியகமாகவும் நினைவிடமாகவும் மாற்றியிருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று, பல ஆண்டுகளாக நீடித்த சர்ச்சைகளுக்குப் பிறகு, கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரிய அதிகாரிகள் ஹிட்லர் பிறந்த வீட்டைப் புதுப்பித்து காவல் நிலையமாக மாற்றினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு