(இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
ஆந்திராவில் 20 ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலை திருட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர், நான்கு இளைஞர்களால் மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக, விஜயவாடா படமட்டா காவல் நிலைய ஆய்வாளர் பவன் கிஷோர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்த விவரங்களை ஆய்வாளர் பவன் கிஷோர் பிபிசியிடம் விவரித்தபோது, "அக்டோபர் 18ஆம் தேதி நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில், விஜயவாடாவின் படமட்டா டோன்கா சாலையில் உள்ள மதுக்கடைக்கு அருகிலுள்ள ஒரு கடையில், சாய் குமார் என்பவர் தண்ணீர் பாட்டிலை திருட முயன்றுள்ளார்" என்றார்.
"சாய் குமார் தெலங்கானாவின் நல்கொண்டாவை சேர்ந்தவர். நல்கொண்டா அருகிலுள்ள மோட்கூரில் உள்ள ஒரு துரித உணவகத்தில் பணிபுரிந்து வந்த அவர், நல்ல வேலை தேடி விசாகப்பட்டினம் அல்லது விஜயவாடா செல்வதாகத் தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியிருந்தார்" என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், "18ஆம் தேதி நள்ளிரவு, விஜயவாடாவின் படமட்டாவில் உள்ள ஒரு கடையின் ஷட்டரைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுக்க முயன்றபோது, பால் பாக்கெட்டுகளை விநியோகிக்க வந்த வேன் ஓட்டுநர் ஒருவர் இதைக் கவனித்து அவரைத் தடுத்து நிறுத்தினார். அந்தக் கடையில் பணிபுரியும் ரவி சங்கர் என்பவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், வேன் ஓட்டுநர் அங்கிருந்து சென்றுவிட்டார். ரவி சங்கர், அருகில் உள்ள மதுக்கடையில் பணிபுரியும் ஐயப்ப சங்கர் என்பவரை வரவழைத்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து சாய் குமாரைக் கடுமையாகத் தாக்கினர்" என்று காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
மின் கம்பத்தில் கயிறுகளால் கட்டி...
"அவர்கள் இருவரும் நவீன், சாய் பிரணீத் ஆகிய மேலும் இரு இளைஞர்களை அங்கு வரவழைத்தனர். அவர்கள் நால்வரும் சேர்ந்து சாய் குமாரை தாக்கினர். அதன்பிறகு, அவரை அருகிலிருந்த மின் கம்பத்தில் கயிறுகளால் கட்டி, சுமார் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாகக் கட்டைகளால் தாக்கினர். தாக்குதலைத் தாங்க முடியாமல் சாய் குமார் உயிரிழந்தார்," என்று ஆய்வாளர் கூறினார்.
தனக்கு மனைவியும் குழந்தைகளும் உள்ளனர் என்றும், அதனால் தன்னை விட்டுவிடுமாறு சாய் குமார் கெஞ்சியும், ஆனால் அவர்கள் துளியும் இரக்கமின்றி அவரைத் தாக்கியுள்ளனர் என்றும் ஆய்வாளர் பவன் கிஷோர் பிபிசியிடம் தெரிவித்தார். சாய்குமார் உயிரிழந்த பிறகு, தாக்குதலில் ஈடுபட்ட நால்வரும் தூணில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
உள்ளூர் மக்கள் அளித்த தகவல்
கடந்த 19ஆம் தேதி காலை, சாலையில் ஒரு உடல் கிடப்பதாக உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பின்னர், அடகு கடையின் அருகிலிருந்த மதுக்கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சாய்குமார் தாக்கப்பட்ட காட்சிகள் தெரியவந்தன.
விசாரணை நடத்திய காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் கைது செய்தனர்.
கடந்த 22ஆம் தேதி நால்வரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் காவல் ஆய்வாளர் பவன் கிஷோர் பிபிசியிடம் தெரிவித்தார்.
'உண்மையில், என் கணவருக்குத் திருடும் பழக்கம் இல்லை'
சாய்குமாரின் மனைவி ரம்யா கிருஷ்ணாவிடம் பிபிசி பேசியபோது, தனது கணவருக்குத் திருடும் பழக்கம் இல்லை என்று கூறினார்.
"தன் வாழ்நாளில் ஒருபோதும் திருடியிராத அவர், எதற்காக ஒரு குடிநீர் பாட்டிலை திருட வேண்டும்? வெறும் 20 ரூபாய் மதிப்புள்ள ஒரு பாட்டிலுக்காக ஒரு மனிதனை இவ்வளவு கொடூரமாகக் கொல்வார்களா? இது எவ்வளவு பயங்கரமானது... எவ்வளவு கொடூரமானது?" என்று அவர் வேதனையுடன் கூறினார்.
தெலங்கானாவின் நல்கொண்டாவில் வைத்து பிபிசி அவரிடம் பேசியது.
'மூன்று சிறு குழந்தைகளுடன் நான் எப்படி வாழ்வேன்?'
"என் கணவர் கடின உழைப்பால் ஈட்டும் வருமானத்தை நம்பித்தான் நாங்கள் வாழ்கிறோம். எங்களுக்கு மூன்று குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை. மூவருமே சிறுவர்கள். மூத்த குழந்தை ஆறாம் வகுப்பு படிக்கிறது. அவர்தான் எங்களுக்கு உணவளிக்க வேண்டும். எங்களுக்குச் சொந்த வீடுகூட இல்லை."
"இப்போது, நான்கு இளைஞர்களால் அவர் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நாங்கள் எப்படி உயிர் பிழைக்கப் போகிறோம் என்றே தெரியவில்லை. சொந்த வீடு இல்லை, வேறு வருமான வழியும் இல்லை... எனக்கு யார் நீதி பெற்றுத் தருவார்கள் என்று தெரியவில்லை," என்று அவர் கூறினார்.
"அந்த நால்வருக்கும் கண்டிப்பாகத் தண்டனை கிடைக்க வேண்டும்"
"என் கணவரை அநியாயமாகக் கொன்ற அந்த நால்வருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். என்னைத் தனியாக விட்டுவிடுங்கள்... என் கணவரை அடித்துக் கொன்று, அதில் சாத்தானுக்குரிய இன்பத்தைக் கண்ட அந்த நால்வருக்கும் தண்டனை கிடைக்கும் வரை, நான் ஓயமாட்டேன்." என்று அவர் கூறினார்.
"முதல்கட்ட ஆதாரங்கள் இருந்ததால், நாங்கள் உடனடியாக அவர்களைக் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலடைத்தோம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சட்டப்படி தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம்," என்று, இந்த வழக்கை விசாரித்து வரும் படமாட்டா காவல் ஆய்வாளர் பவன் கிஷோர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருப்பதால், அவர்களுடன் பேச இயலவில்லை. இதுவரை, அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ அல்லது உறவினர்களோ தொடர்புக்குக் கிடைக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு