Skip to main content

Advertisement

தொப்பியை விழுங்கிய பிரபல நீர்யானை உயிரிழப்பு - அதை வெளியே எடுக்க முடியாமல் போனது ஏன்?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Cincinnati Zoo & Botanical Garden

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி உயிரியல் பூங்காவில், பார்வையாளரின் தொப்பியைத் தவறுதலாக விழுங்கிய பிரபல நீர்யானை ஃபியோனா உயிரிழந்தது.

அந்தத் தொப்பி ஃபியோனாவின் சிறுகுடலின் நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டதால், அதை வெளியே எடுப்பது "சாத்தியமற்றதாக" இருந்ததாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, எதிர்பாராத விதமாக ஃபியோனாவின் வசிப்பிடத்துக்குள் விழுந்த தொப்பியை அது விழுங்கியது. இதையடுத்து, கால்நடை மருத்துவர்கள் ஃபியோனாவைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், தொப்பி சிக்கியிருந்த இடம் மற்றும் 1,088 கிலோ எடை கொண்ட ஃபியோனாவின் உடலமைப்பு காரணமாக, அதை வெளியே எடுக்க முடியவில்லை. இதனால், வியாழக்கிழமை ஃபியோனா உயிரிழந்தது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட உடற்கூராய்வு அறிக்கையில்,"வயிற்றின் இறுதிப் பகுதிக்கு அப்பால் 25 அடி தொலைவிலும், குடலின் இறுதிப் பகுதியிலிருந்து 50 அடி தொலைவிலும்" அந்தத் தொப்பி இருந்தது தெரியவந்ததாக உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.

2017-ஆம் ஆண்டு குறைப்பிரசவத்தில் பிறந்ததையடுத்து, சமூக ஊடகங்களில் பிரபலமான ஃபியோனா குணமடைய வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் விரும்பினர்.


தொப்பியை விழுங்கிய பிறகு ஒரு வாரத்திற்கும் மேலாக ஃபியோனா ஆரம்பத்தில் எந்தப் பாதிப்பும் இன்றி இயல்பாகவே காணப்பட்டது.
Getty Images
தொப்பியை விழுங்கிய பிறகு ஃபியோனா ஆரம்பத்தில் எந்தப் பாதிப்பும் இன்றி இயல்பாகவே காணப்பட்டது.

சின்சினாட்டி உயிரியல் பூங்காவின் விலங்குகள் நலப் பிரிவின் இயக்குநர் டாக்டர் மைக் வென்னிங்கர் வெளியிட்ட அறிக்கையில், மேல் மற்றும் கீழ் செரிமானப் பாதைகளில் மேற்கொள்ளப்பட்ட எண்டோஸ்கோபி பரிசோதனைகள் மூலம் அந்தத் தொப்பி இருந்த இடத்தை அடைய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

"தொப்பி சிக்கியிருந்த இடம் மற்றும் ஃபியோனாவின் உடலமைப்பு காரணமாக, லேப்ராஸ்கோபி எனப்படும் சிறிய துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யும் முறையிலும் அதை அகற்றுவது சாத்தியமில்லை. ஆதரவுச் சிகிச்சையைத் தவிர வேறு எந்தச் சிகிச்சையாலும் ஃபியோனாவைக் காப்பாற்ற வாய்ப்பில்லை. அந்தப் பராமரிப்பாலும் பலன் கிடைத்திருக்காது என்பதை உடற்கூராய்வு உறுதிப்படுத்தியுள்ளது" என்று அவர் கூறினார்.

''ஒரு பார்வையாளர் தனது கம்பளித் தொப்பியை மேலே தூக்கி எறிந்தார். அது மேலே இருந்த மின்விசிறியில் சிக்கி சுழன்றதால் தவறுதலாக ஒரு சிறிய திறப்பு வழியாக ஃபியோனா இருந்த பகுதிக்குள் பறந்து சென்றது'' என உயிரியல் பூங்காவின் செய்தித் தொடர்பாளர் மிச்செல் கர்லி தெரிவித்தார்.

"நாங்கள் முயன்றாலும் இதுபோன்ற சம்பவத்தை மீண்டும் நிகழச் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்," என்று மிச்செல் கர்லி கூறினார்.

தொடக்கத்தில் ஃபியோனாவிடம் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அதன் பசியின்மை குறையத் தொடங்கியது. தொப்பி செரிமானப் பாதை வழியாக வெளியேறிவிடும் என்ற நம்பிக்கையில், பூங்கா ஊழியர்கள் ஃபியோனாவை உணவு உண்ண ஊக்குவித்தனர். ஆனால், அதற்குப் பலன் கிடைக்கவில்லை.

ஃபியோனா உயிரிழந்த நிலையில், மற்ற நீர்யானைகளான பிபி, டக்கர் மற்றும் ஃபிரிட்ஸ் ஆகியவை வழக்கம்போல உணவு உட்கொண்டு இயல்பாக நடந்துகொள்வதாக விலங்குகள் பராமரிப்புப் பிரிவின் இயக்குநர் கிறிஸ்டினா கோர்சுச் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

"அவை எப்படி உணர்கின்றன என்பதை அறிவது கடினம். ஆனால், வழக்கம்போலவே இருப்பதாகத் தெரிகிறது" என்று அவர் கூறினார்.

"மக்களிடம் இருந்தும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளன" என்று சின்சினாட்டி உயிரியல் பூங்காவின் இயக்குநர் டேவ் ஜெனிகே தெரிவித்தார்.

"ஃபியோனாவின் நினைவாக விளையாட்டு அரங்கங்கள், பாலங்கள் மற்றும் கட்டடங்கள் ஊதா நிறத்தில் ஒளிர்ந்ததைக் கண்டு நெகிழ்ந்துபோனோம்" என்றும் அவர் கூறினார்.

ஃபியோனாவின் நினைவாக அமெரிக்க செனட் சபைகூட வெள்ளிக்கிழமை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

2017-ஆம் ஆண்டு சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் குறைப்பிரசவத்தில் பிறந்தபோது ஃபியோனா பிரபலமானது. பிறந்தபோது வெறும் 13 கிலோ எடையுடன் இருந்த ஃபியோனா, உயிர் பிழைப்பதற்குப் போராடியது. அந்த இனத்தைச் சேர்ந்த நீர்யானைகளில் இதுவரை பதிவான மிகக் குறைந்த பிறப்பு எடையில் பாதியளவே ஃபியோனாவின் எடை இருந்ததாக உயிரியல் பூங்கா தெரிவித்திருந்தது.

"உலகம் முழுவதிலுமிருந்து எங்களுக்குக் கிடைக்கும் ஆதரவு, ஃபியோனா உயிர் பிழைக்க வேண்டும் என்று அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தித்த அந்தக் காலத்தை நினைவுபடுத்துகிறது. அப்போது அது உயிர் பிழைத்தது. ஏறக்குறைய பத்தாண்டுகள் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது" என்று டேவ் ஜெனிகே கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு