Skip to main content

Advertisement

"ராஜீவுக்கு செய்யும் துரோகமாகி விடாதா?" - திமுகவுடனான கூட்டணி குறித்து சுயசரிதையில் பகிர்ந்த சோனியா காந்தி

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
கருணாநிதி, சோனியா காந்தி
DIBYANGSHU SARKAR/AFP via Getty Images
2004ஆம் ஆண்டில் கருணாநிதி- சோனியா காந்தி சந்திப்பு

2004 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணி அமைக்க முதலில் தயங்கியதாகவும், பின்னர் கருணாநிதியுடன் நல்ல புரிதல் ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

2004 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவரது சுயசரிதையின்படி, ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான கசப்பான நினைவுகள் இருந்தபோதிலும், பாஜகவை எதிர்கொள்வதற்கு திமுகவுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று சோனியா காந்தி கருதினார்.

ஆனால், இந்த முடிவை எடுப்பது அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. திமுகவுடன் கைகோர்ப்பது தனது கணவர் ராஜீவ் காந்திக்கு செய்யும் துரோகமாக இருக்குமோ என்ற கேள்வி அவருக்குள் எழுந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தயக்கத்தைக் கடந்து, திமுக தலைவர் மு. கருணாநிதியை முதன்முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அனுபவம் வரை தனது நினைவுகளைப் பதிவு செய்துள்ளார் சோனியா காந்தி.

தனது சுயசரிதையான 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey of Love) என்ற நூலில், 2004 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி உருவானதற்குப் பின்னால் இருந்த அரசியல் சூழல், கருணாநிதியுடனான முதல் உரையாடல், இருவருக்கும் இடையே ஏற்பட்ட புரிதல் ஆகியவற்றை அவர் விவரித்துள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை ஏற்படுத்திய தயக்கம்

2004 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜக தலைமையிலான ஆட்சியை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சோனியா காந்தி ஈடுபட்டிருந்தார்.

அந்த முயற்சியில் தென்னிந்தியாவில் திமுக மிக முக்கியமான அரசியல் சக்தியாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசின் மீது கருணாநிதி அதிருப்தியில் இருந்ததாகவும், திமுகவை அணுகுவதற்கு அதுவே சரியான தருணம் என்றும் சோனியா காந்தி கருதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் திமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியதைத் தன்னால் உணர முடிந்ததாகவும், ஆனால் அந்த விஷயத்தைத் தன்னிடம் எப்படிப் பேசுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான பழைய நினைவுகள்

1991 ஏப்ரல் மாதத்தில் ராஜீவ் காந்தியுடன் சோனியா காந்தி பங்கேற்ற நிகழ்வு
Prashant Panjiar/The The India Today Group via Getty Images
1991ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியுடன் சோனியா காந்தி

1991 மக்களவை தேர்தல் காலத்தில் திமுக தொண்டர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த கட்சியைச் சேர்ந்த சிலர் ராஜீவ் காந்திக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்ததாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் ஆணையத்தின் அறிக்கை 1997-ஆம் ஆண்டில் வெளியானபோது, படுகொலையில் ஈடுபட்ட தமிழர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்ததாக திமுக தலைவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். இதையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்றிருந்தது.

இந்தப் பின்னணியில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த தனது மனநிலையை சோனியா காந்தி வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.

"அந்த வேதனையான நினைவுகள் மீண்டும் என்னை வாட்டத் தொடங்கியபோது, நான் என்ன செய்ய வேண்டும்? அவர்களுடன் கைகோர்த்தால், அது ராஜீவுக்கு செய்யும் துரோகமாகிவிடாதா என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், பாஜகவுக்கு எதிரான அணியை வலுப்படுத்த இந்தக் கூட்டணி அவசியம் என்பதை ராஜீவ் காந்தி அறிந்திருந்தால், அவரும் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரோ என்ற கேள்வியையும் தனக்குள் எழுப்பிக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியில், பெரிய அரசியல் நோக்கத்துக்காக விரைவாக முடிவெடுக்க வேண்டியிருந்ததாகக் கூறும் சோனியா காந்தி, கருணாநிதியை முதன்முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்ட தருணத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

கருணாநிதியுடன் முதல் தொலைபேசி உரையாடல்

"திமுகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்காக மு. கருணாநிதிக்கு நான் முதன்முதலில் தொலைபேசியில் அழைத்தபோது, என் இதயம் படபடத்துக்கொண்டிருந்தது. நான் நடுங்கிக்கொண்டிருந்தேன்" என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அந்த உரையாடலில் இருவருக்கும் இடையே மொழி வேறுபாடு இருந்தது. தனக்குத் தமிழ் தெரியாது என்றும், கருணாநிதிக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் குறிப்பிடும் அவர், இருந்தபோதிலும் கருணாநிதி மிகவும் நட்புடன் பதிலளித்ததாகக் கூறியுள்ளார்.

அந்தத் தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இருவரும் நேரில் சந்தித்துப் பேசினர். கூட்டணி அமைப்பது தொடர்பான அடுத்தடுத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு கருணாநிதி மீதான தனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காலப்போக்கில் கருணாநிதி மீது தனக்கு மரியாதை ஏற்பட்டதாகவும், கலைத்துறையில் இருவருக்கும் பொதுவான ஆர்வங்கள் இருந்ததை அறிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி ஒரு கவிஞர், திரைக்கதை எழுத்தாளர் என்றும், தனது பாரம்பரியம், தொன்மையான தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் மீது அவர் மிகுந்த பெருமை கொண்டிருந்ததாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்தப் பொதுவான ஆர்வங்களே இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டணி உருவான விதம்

2004ஆம் ஆண்டில் சோனியா காந்தி - கருணாநிதி சந்திப்பு. நடுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கிறார்
PRAKASH SINGH/AFP via Getty Images
2004ஆம் ஆண்டில் சோனியா காந்தி - கருணாநிதி சந்திப்பு. நடுவில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

கருணாநிதியுடனான முதல் தொடர்புக்குப் பிறகு கூட்டணி பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்த கட்டங்களை எட்டின.

கூட்டணியில் இடம்பெறவிருந்த கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்ச்சியாகச் சந்திப்புகளை நடத்தியதாகக் கூறும் சோனியா காந்தி, தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு தொடர்பான பணிகளைத் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் இடையே மேற்கொள்ளுமாறு தனது சகாக்களிடம் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செயல்பாடுகளின்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போதெல்லாம் தான் தலையிட வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, 2004ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) முறைப்படி உருவானதாகவும் தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் சோனியா காந்தி முக்கியப் பங்காற்றினார். பின்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்த அணி வெற்றி பெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது.

'நாங்கள் ஆதரித்தது ஈழத் தமிழர்களைத்தான்'

சோனியா காந்தியின் இந்தப் பதிவுகள் குறித்து விளக்கமளித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், பாஜகவை எதிர்கொள்வதற்கு திமுக ஒரு வலுவான அரசியல் சக்தியாக இருக்கும் என்று சோனியா காந்தி கருதியதையே தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுவது குறித்தும் அவர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

திமுக ஆதரித்தது ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையே தவிர, விடுதலைப் புலிகள் அமைப்பை அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிங்களர்களால் தமிழர்கள் அவமதிக்கப்பட்டதாகவும், இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள இளங்கோவன், அந்த மக்களின் உரிமைகளுக்காகவே திமுக குரல் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

இதற்காகத் தமிழீழ ஆதரவாளர் அமைப்பின் (TESO) மாநாட்டையும் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

"ஒரே நோக்கத்தை இருவர் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக, இருவரும் ஒரே வழியில் செயல்படுகிறார்கள் என்று கூற முடியாது. ஒருவர் வலுக்கட்டாயமாகப் போராடலாம். மற்றொருவர் அமைதியான வழியில் ஆதரவு தெரிவிக்கலாம். நாங்கள் நக்சலைட்டுகளைப் போலவோ, தீவிரவாதிகளைப் போலவோ செயல்படவில்லை. இந்திய அரசின் ஆதரவுடன் இந்தப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காணவே விரும்பினோம்" என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

'பாஜகவை எதிர்க்க அந்த முடிவை எடுத்தார் சோனியா'

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
BBC
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்

இந்த நூல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், 2004 தேர்தலில் சோனியா காந்தி எடுத்த முடிவு சரியானது என்று கூறியுள்ளார்.

சோனியா காந்தியின் பங்களிப்பையும், தனது அரசியல் அனுபவங்களை அவர் நூலில் பதிவு செய்துள்ள விதத்தையும் பலரும் ஆர்வத்துடன் வரவேற்றுள்ளதாகக் கூறியுள்ள அவர், 2004 தேர்தலில் கருணாநிதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூட்டணிக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கிய முடிவு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் கொள்கை ரீதியாகவும் மற்ற அம்சங்களிலும் வேறுபாடுகள் இருந்தாலும், பாஜக - ஆர்எஸ்எஸ் அணியைத் தோற்கடிக்க வேண்டிய அரசியல் தேவை இருந்ததால் சோனியா காந்தி அந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில் சோனியா காந்தி எப்போதும் உறுதியாக இருந்ததாகவும், அனைத்து சமூகங்கள், மொழிகளைப் பேசும் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அவரது அரசியல் பார்வை என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம்
Getty Images

ஜோதிபாசு முன்மொழிந்த சோனியா காந்தியின் பெயர்

2004 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தபோது, சோனியா காந்தியின் பெயர் கூட்டணியின் தலைமைப் பொறுப்புக்காக முன்மொழியப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு, சோனியா காந்தியின் பெயரை முன்மொழிந்ததாகவும், அதைக் கருணாநிதி வழிமொழிந்ததாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து முதலில் தயக்கத்துடன் இருந்த சோனியா காந்தி, பின்னர் கருணாநிதியுடன் நேரடியாகப் பேசி, அவரைப் புரிந்துகொண்டு, அவர் மீது மரியாதை கொண்டதாகத் தனது அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார்.

பாஜகவை எதிர்கொள்வதற்கான அரசியல் முடிவாகத் தொடங்கிய காங்கிரஸ் - திமுக கூட்டணி, சோனியா காந்திக்கும் கருணாநிதிக்கும் இடையே தனிப்பட்ட புரிதலை உருவாக்கியதையும் அவரது சுயசரிதையில் இடம்பெற்றுள்ள இந்த நினைவுகள் வெளிப்படுத்துகின்றன.

மாறிய கூட்டணி நிலைப்பாடு

2004 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக உருவான காங்கிரஸ் - திமுக கூட்டணி, 2013-ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தொடர்ந்து முறிந்தது. இதையடுத்து, 2014 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்றது. பின்னர், 2015-ஆம் ஆண்டில் மீண்டும் கைகோர்த்த இரு கட்சிகளும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி அடுத்தடுத்த தேர்தல்களில் இணைந்து போட்டியிட்டன. சுமார் 11 ஆண்டுகள் தொடர்ந்த இந்தக் கூட்டணி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுகவுடனான உறவை முறித்துக்கொண்ட காங்கிரஸ், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததுடன், விஜய் தலைமையிலான கூட்டணியிலும் இணைந்தது. இதன் மூலம், 2004-ஆம் ஆண்டில் தொடங்கிய காங்கிரஸ் - திமுக அரசியல் உறவு 2026-ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு