1957ஆம் ஆண்டு நவம்பரில், சோவியத் விஞ்ஞானிகள் லைக்காவை திரும்பிவர முடியாத விண்வெளிப் பயணத்துக்கு அனுப்பினர். அந்தப் பயணம் அதை சோகத்தின் அடையாளமான தேசிய நாயகியாக மாற்றியது. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானி ஒருவரின் மகன், சிறுவயதில் லைக்காவுடன் விளையாடிய நினைவுகளை பிபிசியுடன் பகிர்ந்துகொண்டார்.
பனிப்போர் கால விண்வெளிப் போட்டியின் அதிகம் அறியப்படாத ஒரு பகுதி, மாஸ்கோ தெருக்களில் அலைந்து திரிந்த கலப்பினத் தெருநாய்களை சோவியத் விஞ்ஞானிகள் தேடி வந்ததுதான். மனிதர்கள் விண்வெளிக்குச் செல்வதற்கு முன்பு, மிகுந்த ஆபத்து நிறைந்த இந்தப் பயணத்துக்காக பெண் நாய்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த வகையில், 1957ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி, லைக்கா என்ற நாய் பைகனூர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம், பூமியைச் சுற்றிவந்த முதல் உயிரினம் என்ற வரலாற்றுச் சாதனையை அது படைத்தது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக லைக்கா அந்தப் பயணத்திலிருந்து உயிருடன் திரும்பவில்லை. அதன் கதையின் சோகமான அம்சம் என்னவெனில், இது ஒரு வழிப்பயணம் மட்டுமே என்பதை சோவியத் அதிகாரிகள் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தனர். "அந்தக் காலத்தில், பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து உயிரினங்களை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பக் கொண்டுவரும் தொழில்நுட்பம் விஞ்ஞானிகளிடம் இல்லை," என்று சோவியத் விண்வெளித் திட்டத்தின் மருத்துவப் பிரிவை வழிநடத்திய பேராசிரியர் விக்டர் யாஸ்டோவ்ஸ்கி 2017ஆம் ஆண்டு பிபிசியிடம் தெரிவித்தார்.
"லைக்காவைப் பற்றி அனைவரும் கவலையடைந்திருந்தனர். லைக்கா அந்தப் பயணத்திலிருந்து திரும்பி வராது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்," என்றார் அவர்.
விக்டரின் தந்தை விளாடிமிர் யாஸ்டோவ்ஸ்கி, சோவியத் விண்வெளித் திட்டத்தின் மருத்துவப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார். லைக்கா விண்ணில் ஏவப்படும் சில நாட்களுக்கு முன்பு, ஒன்பது வயது சிறுவனாக இருந்த தாம் லைக்காவுடன் விளையாடியதை விக்டர் நினைவுகூர்ந்தார்.
"லைக்கா மிகவும் பொறுமையான நாய். அன்பாகப் பழகும். எளிதாக பயிற்றுவிக்க முடிந்தது. மிகவும் புத்திசாலி என கருதப்பட்டது. அதற்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆழமான கருநிறக் கண்கள் இருந்தன. விண்வெளிப் பயணத்துக்கு முன்பு வீட்டுச் சூழலை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்த என் தந்தை, அதை மாஸ்கோவுக்கு அருகில் இருந்த என் பாட்டியின் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது நானும் என் சகோதரிகளும் அதனுடன் விளையாடினோம்," என்று அவர் கூறினார்.
1957ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய விண்வெளி முயற்சியை சோவியத் பிரதமர் (Soviet Premier) நிகிதா குருஷ்சேவ் உத்தரவிட்டார்.
"அமெரிக்காவுக்கு முன்பாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஆனால், நீங்கள் அதைச் சாதித்துவிட்டீர்கள்," என்று குருஷ்சேவ் கூறியதாக, ஸ்புட்னிக்-1 மற்றும் ஸ்புட்னிக்-2 திட்டங்களின் ஏவுதளக் குழுவில் பணியாற்றிய பொறியாளர் ஜார்ஜி கிரெச்ச்கோ 2019ஆம் ஆண்டு பிபிசியிடம் தெரிவித்தார்.
"இப்போது, நவம்பர் 7ஆம் தேதி நடைபெறும் புரட்சியின் ஆண்டு விழாவை முன்னிட்டு, நீங்கள் இன்னொரு புதிய சாதனையை நிகழ்த்த வேண்டும்," என்று குருஷ்சேவ் உத்தரவிட்டதாக அவர் கூறினார்.
இதுகுறித்து விக்டர் யாஸ்டோவ்ஸ்கி கூறுகையில், "அதனால்தான் இந்த விண்வெளிப் பயணத்துக்கான தயாரிப்பில் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து திட்டமிட முடியவில்லை," என்றார்.
1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தலைமை வடிவமைப்பாளரான செர்கெய் கொரோலேவ் தலைமையிலான விஞ்ஞானிகளுக்கு, ஸ்புட்னிக்-1 வெற்றியைத் தொடர்ந்து அடுத்த சாதனையை நிகழ்த்த வெறும் சில வாரங்களே குருஷ்சேவ் அவகாசமாக வழங்கியிருந்தார்.
கொரோலேவின் தனிப்பட்ட கனவுடன் இந்தத் திட்டம் இயல்பாகவே ஒத்துப்போனது. சோவியத் விண்வெளித் திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் செர்கெய் கொரோலேவ், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாசி ஜெர்மனியின் வி-2 ஏவுகணைகளின் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து, அதே அடிப்படையில் சோவியத் ஏவுகணைகளை உருவாக்கினார். அமெரிக்க அணுகுண்டுகளை விட அதிக எடை கொண்ட சோவியத் அணு ஆயுதங்களை ஏவக்கூடிய ஏவுகணைகளை அவர் உருவாக்கினார். அவர் வடிவமைத்த ஆர்-7 செம்யோர்கா ஏவுகணை, 1957ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெற்றிகரமாக ஏவப்பட்டு, உலகின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையாக (ICBM) மாறியது. ஆனால், கொரோலேவின் நீண்டகால லட்சியம் இதைவிட முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
1930களில் ராக்கெட்டுகளை உருவாக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே, அவை விண்வெளியை அடைய வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்ததாக, அவரது மகள் 2019ஆம் ஆண்டு பிபிசியிடம் தெரிவித்தார்.
"சிறு வயதிலிருந்தே என் தந்தை வானத்தை கைப்பற்ற வேண்டும் என்று கனவு கண்டார். விமானியாக வேண்டும் என்று விரும்பினார். கிளைடர்களையும் ஒரு விமானத்தையும் உருவாக்கினார். அதன் பிறகுதான் ராக்கெட்டுகளை வடிவமைக்கத் தொடங்கினார்," என்று பேராசிரியர் நடால்யா கொரோலேவா கூறினார்.
"ராக்கெட்டுகளை வடிவமைத்து அவற்றில் பறப்பதே அவரது வாழ்நாள் முழுவதும் அணையாத ஆர்வமாக இருந்தது. 'இனி என் வாழ்வின் ஒரே இலக்கு நட்சத்திரங்களை அடைவதே' என்று அவர் எழுதியிருந்தார்," என்றும் அவர் தெரிவித்தார்.
நாய்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன?
ஆர்-7 ஏவுகணை சோவியத் அணு ஆயுதங்களை எதிரி நாடுகளை நோக்கி ஏவக்கூடிய திறனைப் பெற்றிருந்தாலும், கொரோலேவுக்கு அது வேறொரு நோக்கத்துக்குப் பயன்பட்டது. "ஸ்புட்னிக்" (ரஷ்ய மொழியில் "பயணத் துணை" என்று பொருள்) என்ற செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்துவதன் மூலம், விண்வெளிப் பயணம் சாத்தியமானது என்பதை முதன்முதலில் நிரூபித்தவர் என்ற பெருமையை அவர் பெற முடியும்.
ஒரு மாதத்துக்குள் அவர் மற்றொரு செயற்கைக்கோளையும் ஏவினார். இந்த முறை அதில் ஒரு உயிரினம் பயணிக்கவிருந்தது.
"இன்று கணினி தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும், வெறும் ஒரு மாதத்தில் புதிய செயற்கைக்கோளை உருவாக்கி ஏவ முடியும் என்று நான் நம்பவில்லை. ஆனால் கொரோலேவின் தலைமையில் நாங்கள் அதைச் செய்து முடித்தோம்," என்று ஜார்ஜி கிரெச்ச்கோ கூறினார்.
1951 முதல் 1965ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சோவியத் ஒன்றியம் 50-க்கும் மேற்பட்ட நாய்களை விண்வெளிக்கு அனுப்பியது. லைக்காவுக்கு முந்தைய பயணங்கள் அனைத்தும் பூமியின் சுற்றுப்பாதையை எட்டாத, துணை-சுற்றுப்பாதை (Sub-orbital) பயணங்களாக இருந்தன.
"என் தந்தையின் ஆய்வகத்திலிருந்து அடிக்கடி ஒரு வாகனம் வீட்டுக்கு வரும். அதன் கதவு திறந்தவுடன், குரைத்துக்கொண்டும் வாலாட்டிக்கொண்டும் பல நாய்கள் வெளியே குதித்துவிடும்," என்று விக்டர் யாஸ்டோவ்ஸ்கி நினைவுகூர்ந்தார்.
"வீட்டின் அருகேயுள்ள வனப்பகுதிக்குள் அவை ஓடிச்செல்லும். பின்னர் எங்களிடம் வந்து முகத்தை நக்கும். உணவளிக்கப்பட்ட பிறகு ஒரு கட்டளை வழங்கப்படும். அவை நன்கு பயிற்சி பெற்றிருந்ததால் உடனே மீண்டும் வாகனத்தில் ஏறி ஆய்வகத்துக்குத் திரும்பிச் செல்லும்," என்றார்.
விண்வெளிப் பயணங்களுக்காக நாய்களைத் தேர்ந்தெடுத்ததில் சோவியத் விஞ்ஞானிகள், அமெரிக்க விஞ்ஞானிகளிடமிருந்து மாறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றினர். அமெரிக்கா முதலில் பழ ஈக்களையும் பின்னர் குரங்குகளையும் விண்வெளிக்கு அனுப்பியிருந்தது.
"குரங்குகளை ராக்கெட்டுகளில் அனுப்பியபோது பல தோல்விகள் ஏற்பட்டன என்பது தெளிவாகத் தெரிந்தது. சில குரங்குகளுக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. மயக்க மருந்து கொடுத்து அனுப்பினால், பூமிக்குத் திரும்பக் கிடைக்கும் தகவல்கள் முழுமையற்றதாகவும் துல்லியமற்றதாகவும் இருக்கும்," என்று யாஸ்டோவ்ஸ்கி கூறினார்.
"அதிலும் சிறிய உயிரினங்களான எலிகள் அல்லது பெருச்சாளிகளை அனுப்பியிருந்தால், அதிலிருந்து கிடைக்கும் தகவல்களை மனிதர்களுக்கும் எதிர்கால மனித விண்வெளிப் பயணங்களுக்கும் எவ்வாறு பொருத்திப் பார்க்க முடியும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாய்களைத் தேர்ந்தெடுத்ததற்கு சோவியத் விஞ்ஞானிகளுக்கு மற்றொரு காரணமும் இருந்தது என்று யாஸ்டோவ்ஸ்கி நினைவுகூர்ந்தார்.
"நாய்களின் உடலியல் செயல்பாடுகள் குறித்து சோவியத் விஞ்ஞானிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. புகழ்பெற்ற ரஷ்ய விஞ்ஞானி இவான் பாவ்லோவ், நாய்களின் ரத்த ஓட்ட அமைப்பு, செரிமான முறை மற்றும் உயர்மட்ட நரம்பியல் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்காகவே அவர் நோபல் பரிசும் பெற்றார்," என்றார்.
மேலும், விண்வெளித் திட்டத்துக்காக சோவியத் விஞ்ஞானிகள் திட்டமிட்டே தெருநாய்களைத் தேர்ந்தெடுத்தனர்.
"விலையுயர்ந்த இன நாய்களை அல்ல, தெருக்களில் வாழும் நாய்களையே விண்வெளித் திட்டத்துக்காகப் பயிற்றுவிக்க முடிவு செய்தனர். அவற்றில் வலிமையானவையே உயிர்வாழ்ந்திருந்தன. அவை வீடற்ற நாய்கள். ஏன் அவை தேர்ந்தெடுக்கப்பட்டன? அவற்றுக்கு தாங்கும் திறன் அதிகமாக இருந்தது. அதிக வசதிகளை எதிர்பார்க்காத இயல்பும் இருந்தது. தெருவாழ்க்கைதான் அவற்றை இயற்கையாகத் தேர்ந்தெடுத்து உருவாக்கியிருந்தது," என்றார்.
பெண் நாய்கள் கட்டுப்படுத்துவதற்கும் பயிற்றுவிப்பதற்கும் எளிதாக இருந்ததால் அவை தேர்வு செய்யப்பட்டன. மேலும், விண்கலத்துக்குள் பொருந்துவதற்கு அவற்றின் எடை 6 முதல் 7 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டியிருந்தது.
விண்வெளிப் பயணத்துக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக, ஏவுதலுக்கு முன்பாக பல நாட்களும் வாரங்களும் அவை அழுத்தம் பராமரிக்கப்பட்ட சிறிய அறைகளில் வைக்கப்பட்டன. பல்வேறு ஒலிகள், மாறும் காற்றழுத்த நிலைகள் மற்றும் எடையற்ற சூழல்களுக்கு அவை எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்தனர்.
சர்வதேச கண்டனம்
அமைதியான இயல்பு கொண்ட குட்ரியாவ்கா (சுருள் முடியுள்ளவள்) என்ற பெயருடைய நாய், வானொலி நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது குரைத்தது. அதன்பிறகு அது ரஷ்ய மொழியில் "குரைப்பவள்" என்று பொருள்படும் "லைக்கா" என்ற பெயரால் அறியப்பட்டது.
"அனைவரும் அதை ஒரு நாயகியாகவே பார்த்தனர்," என்று யாஸ்டோவ்ஸ்கி கூறினார்.
ஆனால், விஞ்ஞானிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்ற அழுத்தத்தில் பணியாற்றி வந்தனர். ஸ்புட்னிக்-1 திட்டத்தில் திருத்தங்கள் செய்து, அதில் நாய்க்கான அழுத்தக் கட்டுப்பாட்டு அறையை அவசரமாக இணைத்தனர்.
"லைக்காவின் அறைக்கான வெப்பக் காப்பு அமைப்பு முறையாக உருவாக்கப்படவில்லை," என்று யாஸ்டோவ்ஸ்கி பின்னர் நினைவுகூர்ந்தார். "அதன் அறைக்குள் வெப்பநிலை மிகவும் அதிகரித்ததால் இறந்துவிட்டது."
அந்தக் காலத்தில் லைக்காவின் நிலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவற்றில் ஒன்றாக, "நாயை மீண்டும் பூமிக்குத் திருப்பி அனுப்ப சோவியத் ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் இதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை" என்று பிபிசி செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக, லைக்கா பூமியின் சுற்றுப்பாதையில் பல நாட்கள் உயிருடன் இருந்ததாக சோவியத் அதிகாரிகள் கூறிவந்தனர். ஆனால் 2002ஆம் ஆண்டு, விண்கலத்தின் வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்ததால், பயணம் தொடங்கிய ஐந்து முதல் ஏழு மணி நேரங்களுக்குள் அதிக வெப்பம் மற்றும் மனஅழுத்தத்தால் லைக்கா உயிரிழந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
அமெரிக்க தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள, ரகசியத் தகவல்களிலிருந்து பின்னர் வெளியிடப்பட்ட அச்சுப் பதிவுகளில் லைக்காவின் சுவாசம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றின்படி, லைக்கா உயிருடன் பூமியின் சுற்றுப்பாதையை அடைந்திருந்தது. சுமார் 103 நிமிடங்களில் ஒருமுறை பூமியைச் சுற்றிவரும் வகையில் அது சுற்றுப்பாதையில் பயணித்தது.
லைக்காவை மரணத்தை நோக்கிய பயணத்துக்கு அனுப்பிய முடிவு அப்போது உலகளவில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
பிரிட்டனில் விலங்கு நல அமைப்புகள் சோவியத் தூதரகத்துக்கு முன்பு போராட்டம் நடத்தின. லைக்காவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள நாய் வளர்ப்போர் ஒரு நிமிடம் மௌனம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவை அழைப்பு விடுத்தன.
நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்துக்கு வெளியே, நாய்களை நேசிப்பவர்கள் தங்களது செல்லப்பிராணிகளுடன் பேரணியாக வந்தனர். அமெரிக்க விலங்கு கொடுமைத் தடுப்பு சங்கமும், அமெரிக்க வெளியுறவுத் துறையின் மூலம் சோவியத் அரசுக்கு கண்டனக் கடிதம் அனுப்பியது.
இந்த எதிர்ப்புகள், விண்வெளித் திட்டங்களில் விலங்குகளைக் கையாளும் முறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தின. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பயணங்களில், விலங்குகளை உயிருடன் மீட்கும் வசதிகளுடன் கூடிய அமைப்புகள் வடிவமைக்கப்பட்டன.
லைக்காவின் உயிரிழப்புக்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, மேலும் இரண்டு நாய்கள் சோவியத் ஒன்றியத்தால் விண்வெளிக்குப் அனுப்பப்பட்டன. அவை இரண்டும் உயிருடன் திரும்பின.
1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ஏவப்பட்ட பெல்கா மற்றும் ஸ்ட்ரெல்கா ஆகிய நாய்கள், பூமியை 17 முறை சுற்றிவந்த பின்னர் மறுநாள் பாதுகாப்பாக தரையிறங்கின.
இருப்பினும், பூமியின் சுற்றுப்பாதையை எட்டிய முதல் நாய் என்ற பெருமையால், லைக்கா சோவியத் விண்வெளி ஆய்வின் அடையாளமாக மாறியது.
அதன் உருவம் பொறிக்கப்பட்ட நினைவு அஞ்சல் தலைகளும் உறைகளும் வெளியிடப்பட்டன. "லைக்கா" என்ற பெயரில் சிகரெட்டுகளும் தீப்பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டன. 2008ஆம் ஆண்டு மாஸ்கோவில் திறந்து வைக்கப்பட்ட இரண்டு மீட்டர் உயர சிலையில், ராக்கெட் ஒன்று மனிதக் கையாக மாறியிருப்பதையும், அந்தக் கையின் உள்ளங்கையில் லைக்கா நிற்பதையும் காணலாம்.
லைக்காவின் தியாகம் ஒரு புதிய காலத்தின் தொடக்கமாக அமைந்தது என்று யாஸ்டோவ்ஸ்கி கருதினார்.
"எடையற்ற விண்வெளிச் சூழலிலும் உயிரினம் வாழ முடியும் என்பதை லைக்காவின் பயணம் நிரூபித்தது. மனிதன் விண்வெளிக்குச் செல்லும் பாதையை அது திறந்தது," என்றார்.
ஆனால் அனைவரும் இதை ஏற்கவில்லை.
விண்வெளிப் பயணங்களுக்காக நாய்களைத் தேர்வு செய்து பயிற்சியளிக்கும் சோவியத் திட்டத்தை வழிநடத்தியவரும், லைக்காவைத் தேர்ந்தெடுத்துப் பயிற்றுவித்தவருமான ஓலெக் கசென்கோ, 1998ஆம் ஆண்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
"விலங்குகளுடன் மேற்கொள்ளப்படும் இந்த வகை ஆய்வுகள் எங்கள் எல்லோருக்கும் மனவேதனையை ஏற்படுத்துகின்றன. காலம் செல்லச் செல்ல எனது வருத்தம் அதிகரிக்கிறது. அந்த நாயின் உயிரிழப்பை நியாயப்படுத்தும் அளவுக்கு இந்தப் பயணத்திலிருந்து நாங்கள் போதுமான பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை," என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு