என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் தொடர்பான பெரிய சர்ச்சை, உலகளாவிய சிப் வர்த்தக மையம் என்ற சிங்கப்பூரின் வளர்ச்சியையும், சட்டவிரோத வர்த்தகம் நடைபெறுவதாகக் கூறப்படும் இடம் என்ற அதன் மற்றொரு முகத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
அமெரிக்காவின் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை பொறுப்பில் இருந்து வியாழக்கிழமை ஹுவாங் விலகினார். தமக்கு ஒரு பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ்பீட் என்ற தரவு மைய நிறுவனத்தை நடத்தி வந்த ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிறுவனம் என்விடியா சிப்களை அதிக அளவில் வாங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.
பல தசாப்தங்களாக, அமெரிக்கா மற்றும் சீனச் சந்தைகளை எளிதில் அணுகக்கூடிய, திறந்த வர்த்தகக் கொள்கைகளைக் கொண்ட, வணிகத்துக்கு உகந்த பொருளாதாரமாகத் தன்னை நிலைநிறுத்த சிங்கப்பூர் கவனமாகச் செயல்பட்டு வந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சியுடன், உயர்தர செமிகண்டக்டர் சிப்களின் வர்த்தகத்துக்கான முக்கிய மையமாகவும் சிங்கப்பூர் உருவெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு, என்விடியா நிறுவனத்தின் உலகளாவிய பில்லிங் மையங்களில் சிங்கப்பூர் இரண்டாவது பெரிய மையமாக இருந்தது. அமெரிக்க சிப் உற்பத்தி நிறுவனமான என்விடியாவின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வருவாயாக இருந்தது.
ஆனால், அந்த வருவாயில் 1 சதவீதத்துக்கும் குறைவான தொகைக்கான சிப்கள் மட்டுமே உண்மையில் சிங்கப்பூருக்குள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவின் பல நிறுவனங்கள் சிப்களுக்கு ஆர்டர் கொடுத்து, அவற்றை வேறு நாடுகளுக்கு அனுப்புவதற்கான மையமாக சிங்கப்பூர் செயல்படுகிறது.
2022-ஆம் ஆண்டு முதல், சீனாவுக்கு மேம்பட்ட அமெரிக்க செமிகண்டக்டர்களை ஏற்றுமதி செய்வதற்கும், சீன நிறுவனங்கள் அவற்றைப் பெறுவதற்கும் அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து, சிங்கப்பூர் போன்ற பிற நாடுகளைப் பயன்படுத்தி சீன நிறுவனங்கள் இந்தச் சிப்களைப் பெறக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு மெகாஸ்பீட் ஓர் உதாரணமாகக் கூறப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியாவில் என்விடியா சிப்களை அதிக அளவில் வாங்கும் நிறுவனமாக மெகாஸ்பீட் உருவெடுத்தது. மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தனது தரவு மையங்கள் மூலம், சீன நிறுவனங்கள் இந்தச் சிப்களை மறைமுகமாக அணுகுவதற்கு அந்த நிறுவனம் வழிவகுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சிங்கப்பூர், மேம்பட்ட ஏ.ஐ சிப்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்றுவதை தடை செய்யவில்லை ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறுவதாக அமையலாம்.
மற்ற நாடுகள் ஒருதலைப்பட்சமாக விதிக்கும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தாங்கள் அமல்படுத்துவதில்லை என்று சிங்கப்பூர் கூறியுள்ளது. அதேநேரத்தில், தனது அதிகார வரம்புக்குள் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் அத்தகைய விதிமுறைகளை மதிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தைக் கண்காணிப்பதில் சிங்கப்பூர் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.
சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டீப்சீக், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் என்விடியா சிப்களை வாங்கி வருவதாக அமெரிக்கா கவலை தெரிவித்தது. இதையடுத்து, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், சீன நாட்டவர்கள் உட்பட நான்கு நிறுவனங்கள் மீதும் ஐந்து நபர்கள் மீதும் சிங்கப்பூர் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
மெகாஸ்பீட் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்த சிங்கப்பூர் அதிகாரிகள் முயன்றனர். ஆனால், அதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டனர்.
வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 2025 பிப்ரவரி முதல் மெகாஸ்பீட் உள்ளிட்ட நிறுவனங்கள், சிங்கப்பூர் வழியாக வாங்கி ஏற்றுமதி செய்யப்பட்ட தரவு சர்வர்கள் குறித்துத் தவறான தகவல்களை அளித்தனவா என்பது குறித்து விசாரித்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அந்தக் கருவிகள் அண்டை நாடான மலேசியாவுக்குச் செல்லும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், அவை இறுதியாக வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று சிங்கப்பூர் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான சூப்பர்மைக்ரோ குறித்து கூடுதல் தகவல்களைப் பெற, அமெரிக்க அதிகாரிகளிடம் பலமுறை உதவி கோரியதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நிறுவனம், மெகாஸ்பீட் நிறுவனத்துக்குக் கணினி சர்வர்களை வழங்கி வந்ததாக பிபிசி அறிகிறது.
ஆனால், "மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தும், இதுவரை சிங்கப்பூருக்குக் குறைந்த அளவிலான தகவல்களும் உதவிகளுமே கிடைத்துள்ளன" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் பிபிசி விளக்கம் கேட்டுள்ளது.
மெகாஸ்பீட் நிறுவனத்தின் மோசடி குறித்த சந்தேகத்தில் ஆலிஸ் ஹுவாங்குக்குப் பங்கு இருந்ததா என்பதையும் விசாரித்ததாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், உளவு பார்த்தாரா என்பது குறித்து இந்த விசாரணை நடத்தப்படவில்லை.
இறுதியில், குற்றச்செயலில் அவர் ஈடுபட்டதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறிய அதிகாரிகள், சில மாதங்களாக அவரது கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்து வைத்திருந்த பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரியில் சிங்கப்பூரை விட்டு வெளியேற அவரை அனுமதித்தனர்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விசாரணையைத் தொடங்கியதில் இருந்து, மெகாஸ்பீட் நிறுவனத்தின் மீதோ, இந்த விவகாரத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீதோ சிங்கப்பூர் இதுவரை எந்தக் குற்றச்சாட்டையும் பதிவு செய்யவில்லை.
மெகாஸ்பீட் தொடர்பான சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவின் விசாரணைகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.
2024-ஆம் ஆண்டு, மலேசியாவில் மெகாஸ்பீட் நிறுவனத்துக்குச் சொந்தமான தரவு மையத்துக்கு அமெரிக்க அதிகாரிகள் சென்றிருந்தனர். அங்கு என்விடியா தொழில்நுட்பம் கொண்ட சிப்கள் அவற்றின் பெட்டிகளிலேயே வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். உயர்தரச் சிப்களை மெகாஸ்பீட் வேறு இடங்களுக்கு அனுப்புகிறதா என்ற சந்தேகத்தை இது எழுப்பியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, என்விடியாவின் கணக்கில் இடம்பெற்றதைவிட 50,000 சிப்கள் கூடுதலாக மெகாஸ்பீட் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, கூடுதல் கிடங்குகளுக்குச் சென்று ஆய்வு செய்த என்விடியா, தனது கணக்குகளையும் பின்னர் திருத்தியது.
தாங்கள் எப்போதும் சட்டப்படியே செயல்பட்டு வந்துள்ளதாக மெகாஸ்பீட் தொடர்ந்து கூறி வருகிறது. அதிகாரிகள் இதற்கு முன்பு நடத்திய ஆய்வுகளிலும் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "அரசு உரிய முறையில் மேற்கொள்ளும் ஆய்வுகளை வரவேற்கிறோம்" என்றும், "அமெரிக்க அரசுடன் ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளோம்" என்றும் மெகாஸ்பீட் கூறியது.
அமெரிக்காவின் உயர்தரச் சிப்களை சீன நிறுவனங்களும் அமைப்புகளும் சட்டவிரோதமாகப் பெறுகின்றன என்ற குற்றச்சாட்டுகளைச் சீனா நீண்டகாலமாக மறுத்து வருகிறது.
மெகாஸ்பீட் நிறுவனமும் ஆலிஸ் ஹுவாங்கும் சிங்கப்பூருக்கு வந்த விதம், அந்த நாட்டின் திறந்த பொருளாதாரக் கொள்கையால் உருவாகும் மற்ற பாதிப்புகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், சீன நிறுவனங்கள் அதிகம் விரும்பும் இடமாக சிங்கப்பூர் மாறியுள்ளது. டிக்டாக், மேனஸ் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் உலகளாவிய தலைமையகத்தை அங்கு அமைத்துள்ளன. சிங்கப்பூரில் தொழில் தொடங்குவதும் நடத்துவதும் எளிதாக இருப்பதுடன், அந்நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் சீனாவைப் பற்றிய நேர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர்.
சீன நிறுவனங்களைப் பொறுத்தவரை, தங்கள் தாய்நாட்டுக்கு அருகில் ஓர் இடத்தையும், உலகளாவிய வாடிக்கையாளர்களும் முதலீட்டாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய 'நடுநிலையான முகவரியையும்' சிங்கப்பூர் வழங்குகிறது என்கிறார் நியூயார்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் இணைப் பேராசிரியர் வின்ஸ்டன் மா.
ஆனால், இதனால் 'சிங்கப்பூர் வாஷிங்' என்ற போக்கு உருவாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதாவது, சீன நிறுவனங்கள் சிங்கப்பூருக்கு இருக்கும் நற்பெயரைப் பயன்படுத்தி, தங்களின் சீனப் பின்னணியை மறைக்கவும், சந்தேகங்களைக் குறைக்கவும், சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளைக்கூட மூடி மறைக்கவும் முயல்கின்றன என்பதே இதன் பொருள்.
வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வு அமைப்பான சி4ஏடிஎஸ், ஆலிஸ் ஹுவாங் மெகாஸ்பீட் நிறுவனத்தை உருவாக்கிய விதம் இதுபோன்ற ஒரு நிகழ்வாகத் தாங்கள் மதிப்பிட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்தது.
சீனா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள நிறுவனப் பதிவுகளைப் பிபிசி ஆய்வு செய்ததில், 2019-ஆம் ஆண்டு ஹுவாங், ஒரு கேமிங் நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனங்களையும் சீன கேமிங் நிறுவனமான 7ரோடுக்கு விற்றது தெரியவந்தது.
2023 மார்ச் மாதம், 7ரோடு நிறுவனத்தின் சிங்கப்பூரில் உள்ள துணை நிறுவனம், ஹுவாங்கைத் தனது செயல் இயக்குநராக நியமித்தது. அடுத்த நாளே அந்த நிறுவனம் தனது பெயரை மெகாஸ்பீட் என்று மாற்றிக்கொண்டது.
எட்டு மாதங்கள் அந்த நிறுவனத்தின் பொறுப்பில் இருந்த ஹுவாங், பின்னர் அதைச் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு மாற்றிக் கொடுத்தார்.
அந்தக் காலகட்டத்தில், மெகாஸ்பீட் நிறுவனம் "நிறுவன மறுசீரமைப்பு மற்றும் பிராந்திய விரிவாக்கத்தின் முக்கியமான கட்டத்தைக்" கடந்தது. ஹுவாங்கின் நிறுவனத் தொடர்புகள், "மெகாஸ்பீட்டின் சிங்கப்பூர் அடையாளம் உண்மையானதா அல்லது உண்மையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதா" என்ற கேள்விகளை எழுப்பியதாக சி4ஏடிஎஸ் தெரிவித்துள்ளது.
மெகாஸ்பீட் நிறுவனத்தை அவர் மாற்றிக் கொடுத்த பிறகும், வேறொரு நிறுவனம் வழியாக அந்த நிறுவனத்துடன் அவருக்கு இருந்த தொடர்புகள் மற்றும் மாநாடுகளில் தன்னை மெகாஸ்பீட்டின் "தலைவர்" என்று தொடர்ந்து குறிப்பிட்ட லிங்க்ட்இன் பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில், அவர் அந்த நிறுவனத்தின் மீது "நடைமுறையில் தொடர்ந்து கட்டுப்பாடு வைத்திருந்ததாக" சி4ஏடிஎஸ் மதிப்பிட்டது.
சீனாவுடனும் சீன அரசாங்கத்துடனும் மெகாஸ்பீட் நிறுவனத்துக்கும் ஆலிஸ் ஹுவாங்குக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பிபிசி எழுப்பிய கேள்விகளுக்கு அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை.
இவை அனைத்தும் சிங்கப்பூர் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலையை காட்டுகின்றன.
"நீண்ட காலமாக, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் சிறந்த உறவைப் பேணி, இரு தரப்பிலிருந்தும் சிங்கப்பூர் பலன்களைப் பெற்று வந்துள்ளது" என்கிறார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுத் துறை விரிவுரையாளர் டிலன் லோ.
இரு வல்லரசுகளுக்கும் இடையே நடுநிலையான நாடாகச் சிங்கப்பூர் தன்னை நீண்டகாலமாக முன்னிறுத்தி வருகிறது. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், தங்கள் நாடு சீனாவுக்கு ஆதரவானதோ, அமெரிக்காவுக்கு ஆதரவானதோ அல்ல என்றும், "சிங்கப்பூருக்கு மட்டுமே ஆதரவானது" என்றும் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், சிப்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் மோதலால், இந்தச் சமநிலையைப் பேணுவது "இப்போது மிகவும் கடினமாகிவிட்டது; சில நேரங்களில் பெரும் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது" என்கிறார் டிலன் லோ.
மெகாஸ்பீட் விவகாரத்தால், இரு நாடுகளுக்கும் இடையே சிங்கப்பூர் இதுவரை கவனமாகப் பேணி வந்த சமநிலையைத் தொடர்ந்து காப்பது மேலும் கடினமாகும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் தொடர்பான விவகாரங்களைச் சிங்கப்பூர் ஏன் விசாரிக்கிறது என்றும், அது அமெரிக்காவின் நலன்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா என்றும் சீனா கேள்வி எழுப்பக்கூடும் என்கிறார் சிங்கப்பூர் அரசியல் ஆய்வாளரும் கார்னகி சீனாவின் இணை ஆய்வாளருமான சோங் ஜா இயான்.
மறுபுறம், சிங்கப்பூர் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையை அமெரிக்கா, ''பொறுப்பை தன் மீது தள்ள முயற்சிப்பதாக" கருதக்கூடும். இதனால் வெள்ளை மாளிகையிலிருந்து எதிர்மறையான எதிர்வினை ஏற்படலாம் என்கிறார் அவர்.
"எந்தப் பக்கமும் சார்ந்து செயல்படுவதில்லை என்ற கொள்கை நிலைப்பாட்டைச் சிங்கப்பூர் எடுத்துள்ளது. ஆனால், ஒரு தரப்பைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதன் மூலம், இரு தரப்பில் ஏதேனும் ஒன்றின் நோக்கத்திற்கு உடந்தையாக இருப்பதாகக் கருதப்படும் அபாயம் உள்ளது" என்கிறார் அவர்.
ஆனால், சிங்கப்பூரின் எஸ். ராஜரத்தினம் சர்வதேச ஆய்வுப் பள்ளியின் உதவிப் பேராசிரியரும் சீன விவகார நிபுணருமான பெஞ்சமின் ஹோ, "அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே சிங்கப்பூர் சிக்கிக்கொள்வது இது முதல் முறையுமல்ல; கடைசி முறையாகவும் இருக்காது" என்று சுட்டிக்காட்டுகிறார்.
"திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடு எதிர்கொள்ள வேண்டிய விலை இதுதான். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடையும்போது, நீங்கள் நடுவில் சிக்கிக்கொள்கிறீர்கள்" என்கிறார் அவர்.
பிபிசியின் குளோபல் சீனா பிரிவைச் சேர்ந்த ஜாக் லாவ் கூடுதல் தகவல்களை வழங்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு