சனிக்கிழமை ஓமனில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான 2026 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் மொஹித் உல்வா.
18 வயதான மொஹித், இந்திய அணி 252 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இந்திய அணியின் வெற்றிக்கு மேலும் 84 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அவர் பொறுப்புடன் விளையாடினார்.
ஒன்பதாவது விக்கெட்டுக்கு மனல் சௌஹானுடன் இணைந்து 57 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து, கடைசி விக்கெட்டுக்கு சி. வெங்கட்டுடன் இணைந்து 29 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்தச் சிறப்பான ஆட்டத்துக்காக இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக மொஹித் தேர்வு செய்யப்பட்டார்.
மொஹித் இந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைத் தொடரில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
தி இந்து குழுமத்தின் விளையாட்டு இதழான ஸ்போர்ட்ஸ்டார் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜாம்நகரில் உள்ள கிரிக்கெட் பங்களாவில் மகேந்திர சிங் சௌஹானிடம் மொஹித் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் திறமையை வளர்த்தெடுத்த அதே பயிற்சியாளர்தான் மகேந்திர சிங் சௌஹான்.
மொஹித் சிறுவயதிலேயே தனது தந்தையின் ஆலோசனையின் பேரில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்டாரிடம் பேசிய மொஹித், "எனது தந்தைக்கு எப்போதும் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தது. ஆனால், அவரது காலத்தில் அவரால் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. நான் சிறுவனாக இருந்தபோது, என்னிடம் சில திறமைகள் இருப்பதை அவர் கவனித்தார். என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்று நினைத்தார்" என்று கூறினார்.
மொஹித்தின் தந்தை ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார். அவர்தான் மொஹித்தை கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர ஊக்குவித்தார்.
தனது தந்தையின் ஆலோசனைக்கு மொஹித் சம்மதித்தார். ஆனால், அதற்குப் பின்னால் வேறு ஒரு காரணமும் இருந்தது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "உண்மையில், படிப்பைத் தவிர்க்கலாம் என்பதற்காகத்தான் நான் சம்மதித்தேன்!" என்றார்.
ஏற்கெனவே தனது கிராமத்தில் உறவினர்களுடன் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடி வந்தார் மொஹித்.
"அங்கும் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தனிப்பட்ட முறையில் இந்த விளையாட்டின் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதனால், எனது தந்தையின் பேச்சைக் கேட்டு கிரிக்கெட் பயிற்சி மையத்துக்குச் செல்லத் தொடங்கினேன்" என்று அவர் தெரிவித்தார்.
வேகப்பந்துவீச்சாளராக மாறிய கதை
மொஹித்தின் பயிற்சியாளர் மகேந்திர சிங் சௌஹான், அவரது உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தினார். இது மொஹித் சிறப்பாகச் செயல்பட உதவியது.
மொஹித் ஆரம்பத்தில் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளராக இருந்தார். ஒருநாள் அவரை வேகப்பந்துவீச்சில் முயற்சி செய்து பார்க்குமாறு மகேந்திர சிங் சௌஹான் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து மொஹித் கூறுகையில், "ஒருநாள் மகேந்திர சார் என்னிடம் வேகமாகப் பந்துவீசிப் பார்க்குமாறு கூறினார். எனது உடல் ஒல்லியாக இருப்பதுடன், நன்றாக ஓடவும் செய்கிறேன் என்பதால் வேகப்பந்துவீச்சில் ஈடுபடலாம் என்று அவர் கூறினார்" என்றார்.
பயிற்சியாளரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட மொஹித், வேகப்பந்துவீச்சில் ஈடுபடத் தொடங்கினார்.
"நான் வேகமாகப் பந்துவீசத் தொடங்கினேன். படிப்படியாக இயல்பான வேகப்பந்துவீச்சாளராக மாறினேன்" என்று அவர் தெரிவித்தார்.
"வேகப்பந்துவீச்சுக்காக நான் ஒருபோதும் தனிப்பட்ட பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றதில்லை. 16 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் பிசிசிஐ பயிற்சி முகாம்களிலும், பிற பயிற்சியாளர்களிடமும் பயிற்சி பெற்றேன். ஆனால், எனக்கெனத் தனியாக வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர் யாரும் இருந்ததில்லை" என்றார் மொஹித்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்தேவ் உனத்கட்டும் மொஹித் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வகை பந்துவீச்சில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
வலைப்பயிற்சியின்போது உனத்கட் மெதுவான வேகத்தில் பவுன்சர் பந்துவீசுவதைப் பார்த்த மொஹித், அதேபோல் பந்துவீசிப் பார்க்க முயன்றார்.
இதுகுறித்து மொஹித் கூறுகையில், "வலைப்பயிற்சியின்போது அவர் அந்தப் பந்தை வீசுவதைப் பார்த்தேன். பின்னர் நானும் அதேபோல் வீசிப் பார்த்தேன். அதைப் பார்த்த ஜெய்தேவ், 'இந்தப் பந்துவீச்சை ஒருபோதும் கைவிட்டுவிடாதே. உன்னால் அதைச் சிறப்பாக வீச முடிந்தால், தொடர்ந்து வீசு' என்று அறிவுறுத்தினார்" என்றார்.
தந்தையுடன் பயிற்சி
ஸ்போர்ட்ஸ்டாரிடம் பேசிய மொஹித், பேட்டிங்கும் தனது ஆட்டத்தின் முக்கியமான பகுதியாக மாறியுள்ளதாகக் கூறினார். இருப்பினும், பேட்டிங் தனக்கு இயல்பாகவே வரக்கூடிய திறன் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
"எனது தந்தை பந்துவீச்சு இயந்திரம் மூலம் எனக்குப் பயிற்சி அளிப்பார். பந்துகளை வீசிப் பயிற்சி செய்ய வைப்பார். பல்வேறு வகையான பயிற்சிகளையும் அளிப்பார். இதன் மூலம்தான் எனது பேட்டிங் திறன் மேம்பட்டது" என்றார் மொஹித்.
மற்ற வீரர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கற்றுக்கொண்டதும் அவருக்குப் பயனுள்ளதாக இருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு