Skip to main content

Advertisement

வார இறுதியில் மும்பையிலிருந்து தெலங்கானாவுக்கு 600 கி.மீ. இந்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி பயணம் செய்தது ஏன்?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
பி. சுதாகர் நாயக்
UGC
பி. சுதாகர் நாயக்

600 கிலோமீட்டர் பயணம் செய்து குட்டைகளை தோண்டும் இளம் ஐஆர்எஸ் அதிகாரியின் கதை இது.

பி. சுதாகர் நாயக், வார இறுதி நாட்களில் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான நாராயண்கேட் பகுதிக்கு வந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

வருமான வரித்துறையில் உதவி ஆணையராக அவர் பணியாற்றி வருகிறார்.

வார இறுதி நாட்களில் அவர் என்ன சமூகப் பணிகளை செய்கிறார்? அவ்வாறு செய்ய அவருக்கு ஊக்கம் அளித்தது எது? அவரது முயற்சிகள் மூலம் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நாராயண்கேட் அருகே பீர்லதண்டா பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் நாயக்.

அவர் மும்பையில் வருமான வரித்துறை உதவி ஆணையராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவர் ஹைதராபாத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சமூக விழிப்புணர்வுப் பணிகளில் நீண்டகால ஆர்வம் கொண்டிருந்த அவர், தனது சொந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

600 கி.மீ வார இறுதிப் பயணம்

மும்பையில் பணியாற்றியபோது, ஒவ்வொரு வார இறுதியிலும் நாராயண்கேட் பகுதிக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் பேருந்தில் மும்பையிலிருந்து புறப்பட்டு, சனிக்கிழமை காலை சங்காரெட்டியை வந்தடைவார்கள். அங்கிருந்து காரில் நாராயண்கேட் பகுதிக்குச் செல்வார்கள்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிராமங்களில் நடைபெறும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் மும்பைக்குத் திரும்பி, திங்கள்கிழமை வழக்கம் போல் பணிக்குச் செல்வார் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவருடன் இணைந்து பணியாற்றிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பாலதுகு ஞானேஸ்வர், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ந்து எட்டு வாரங்கள் மும்பையிலிருந்து நாராயண்கேட் பகுதிக்கு 600 கிலோமீட்டர் பயணம் செய்து வந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

"நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து அவர் மீண்டும் திரும்பி வருவதைப் பார்த்து எங்களுக்கும் உத்வேகம் கிடைத்தது. கிராம மக்களும் முன்வந்து தங்களது ஆதரவை வழங்கினர்" என்று ஞானேஸ்வர் கூறினார்.

அவருடன் இணைந்து பணியாற்றிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பாலதுகு ஞானேஸ்வர், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ந்து எட்டு வாரங்கள் மும்பையிலிருந்து நாராயண்கேட் பகுதிக்கு 600 கிலோமீட்டர் பயணம் செய்து வந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.
BBC
சுதாகர் நாயக் ஆறு பெரிய நீர்நிலைகளைத் தோண்டினார்.

ஆறு இடங்களில் நீர்நிலைகள் தோண்டப்பட்டன

குளங்களைத் தோண்டுவது சுதாகர் நாயக்கின் முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும்.

"நாராயண்கேட், நாகிலிதிக்டா உள்ளிட்ட சில பகுதிகளில் நூற்றுக்கணக்கான அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டும் தண்ணீர் கிடைக்கவில்லை. மழைநீரைச் சேகரித்து நிலத்துக்குள் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சுதாகர் நாயக் குளங்களை உருவாக்கினார். தற்போது பீர்லதண்டா பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கத் தொடங்கியுள்ளது" என்று ஞானேஸ்வர் விளக்கினார்.

சுதாகர் நாயக் மொத்தம் ஆறு பெரிய குளங்களை தோண்டினார்.

வார இறுதி நாட்களில் கிராமத்துக்கு வரும்போது இரவு நேரங்களிலும் அவர் பணியாற்றுவார் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

"நீர் நிலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. குளங்களை வெட்டியதன் மூலம் எங்களது தண்ணீர் பிரச்னையை ஓரளவுக்குத் தீர்த்துள்ளோம். எங்களது கால்நடைகள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு இவற்றிலிருந்து தண்ணீர் கிடைக்கிறது." என்று பிபிசியிடம் பீர்லதண்டாவைச் சேர்ந்த பனோத்து சேவதாஸ் தெரிவித்தார்.

பீர்லதண்டா, சித்ரா தண்டா, பூசலபாடா மற்றும் முக்தாபூர் ஆகிய கிராமங்களில் சுதாகர் நாயக் ஆறு குளங்களை உருவாக்கி உள்ளார்.

"2019-ஆம் ஆண்டு சுதாகர் நாயக் எங்கள் பகுதியில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முன்னெடுத்தார். இதில் இளைஞர்களையும் ஈடுபடுத்தினார். அதன்பிறகுதான் அவருடன் இணைந்து நாங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்" என்று ஞானேஸ்வர் விளக்கினார்.

இருப்பினும், குளங்களுடன் கூடுதலாக சிறிய தடுப்பணைகளும் கட்டப்பட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதாகர் நாயக்
BBC
சுதாகர் நாயக் மேற்கொள்ளும் சமூகத் திட்டங்கள், சர்வோதயா கிராம் சேவா அறக்கட்டளையால் நடத்தப்படுகின்றன என்று அவரது தந்தை ஜீவ்லா நாயக் கூறினார்.

சுதாகர் நாயக்கின் தந்தை என்ன சொன்னார்?

சுதாகர் நாயக்கிடம் பேசுவதற்கு பிபிசி முயன்றது. ஆனால், துறைசார் விதிமுறைகள் காரணமாக அவரால் பேச முடியவில்லை.

இருப்பினும், பீர்லதண்டாவில் அவரது தந்தை ஜீவ்லா நாயக்கிடம் பிபிசி பேசியபோது அவர் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து மீண்டும் திரும்புவது சிரமமாக இருந்தபோதிலும், எந்தத் தயக்கமும் இன்றி இந்த சமூகப் பணிகளைத் தொடர்ந்ததாக அவர் கூறினார்.

"அவரது வேலை எவ்வளவு சிரமமாக இருந்தாலும், இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் கிராமத்துக்கு வருவார். அவர் மட்டுமே இந்தப் பணிகளைச் செய்யவில்லை. அனைவரிடமும் உதவி பெற்று இந்த பணிகளைச் செய்தார்" என்று ஜீவ்லா நாயக் தெரிவித்தார்.

BBC
சர்வோதயா நூலக ஆய்வு மையம்

குளங்களை அமைத்தது மட்டுமின்றி, 32 நூலகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் இந்த நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாணவர்கள் இந்த நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
BBC
நீர்நிலைகள் தவிர, 32 பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுதாகர் நாயக் மேற்கொண்டு வரும் சமூகப் பணிகள் அனைத்தும் சர்வோதயா கிராம சேவா அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவரது தந்தை ஜீவ்லா நாயக் தெரிவித்தார்.

"சுதாகரின் நண்பர்களும் அதிகாரிகளும் இந்த அறக்கட்டளைக்கு ஆதரவளித்து வருகின்றனர்" என்று அவர் விளக்கினார்.

சுதாகர் நாயக் மேற்கொண்ட சமூக விழிப்புணர்வுப் பணிகளுக்கு உத்வேகம் அளித்த மற்றொருவரும் இருந்தார். அவர் வருமான வரித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆர்.கே. பாலிவால்.

அவர் அளித்த உத்வேகமும் ஊக்கமும் காரணமாகவே தனது மகன் இந்தச் சமூகப் பணிகளை மேற்கொண்டதாக ஜீவ்லா நாயக் விளக்கினார்.

தற்போது போபாலில் வசித்து வரும் ஆர்.கே. பாலிவாலை பிபிசி பேட்டி எடுத்தது.

சங்காரெட்டி மாவட்டத்தின் கோங்கிலூர் பகுதியில் முதன்முதலில் சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.

"கோங்கிலூரில் உள்ள சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கடன் பெற்று, 'சர்வோதயா மஞ்சீரா' என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். தற்போது அவர்கள் சுயசார்பு பெற்று, சொந்தக் காலில் நிற்கின்றனர். எண்ணெய் முதல் சோப்புகள் வரை பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.

முதலில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பிறகுதான் சங்காரெட்டி மாவட்டத்தின் கோங்கிலூர் பகுதியில் இத்தகைய பணிகள் தொடங்கப்பட்டதாகவும் ஆர்.கே. பாலிவால் விளக்கினார்.

மற்றவர்களின் உதவியுடன் இந்தச் சமூகப் பணிகளை நாராயண்கேட் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி வருவது மகிழ்ச்சியளிப்பதாக சுதாகர் நாயக் தெரிவித்தார்.

"2018 முதல் 2020-ஆம் ஆண்டு வரை நான் ஹைதராபாத்தில் பணியாற்றினேன். 2023-24ஆம் ஆண்டில் அங்கு சென்றபோது, பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்ததைக் கண்டேன். நாங்கள் தொடங்கியபோது இருந்ததைவிட, சுதாகர் நாயக்கும் கிராம மக்களும் இந்தப் பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் விதத்தைப் பார்ப்பது மிகுந்த மனநிறைவை அளித்தது" என்று ஆர்.கே. பாலிவால் பிபிசியிடம் தெரிவித்தார்.

குறிப்பாக நூலகங்களை அமைப்பதற்கான காரணங்களையும் பாலிவால் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

"நகரங்களில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியிலும் நவீன வசதிகளுடன் கூடிய நூலகங்கள் உள்ளன. ஆனால், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மக்களும் மாணவர்களும் அறிவுசார் ரீதியாகப் பின்தங்கியிருப்பதற்கான காரணம் என்ன என்று சிந்தித்தபோது, புத்தகங்களை அணுகுவதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காததே முக்கியக் காரணம் என்பதை உணர்ந்தேன். அதனால் தான், கிராமப்புற மாணவர்களுக்கு அனைத்து வகையான புத்தகங்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நூலகங்களை அமைக்கும் திட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம்" என்று அவர் விளக்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு