Skip to main content

Advertisement

Health & Fitness

மழைக்காலத்தில் அதிகரிக்கும் நோய்கள்...பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

புகைப்படம்: அலங்காரப் படம்

 

Advertisement

மலேசியாவில் தற்போது மழைக்காலம் நிலவி வரும் நிலையில், தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, வெள்ளநீர் தேங்கும் பகுதிகளிலும் சுகாதாரமற்ற சுற்றுப்புறங்களிலும் வசிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

மழைக்காலத்தில் தேங்கும் நீர், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது. அதேபோல், வெள்ளநீரில் கழிவுநீர் மற்றும் விலங்குகளின் சிறுநீர் கலப்பதால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

           மழைக்காலத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான நோய்கள்:

மழைக்காலத்தில் ஆங்காங்கே தேங்கும் சுத்தமான நீரில் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடும். இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிக்கிறது. திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, உடல் மற்றும் மூட்டு வலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். எனவே, வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற நீர்த் தேக்கங்களை அகற்றுவது அவசியம்.

அடுத்ததாக, மழைக்காலத்தில் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் அசுத்தமடைவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் உணவு நச்சுத்தன்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக, சுத்தமற்ற நீரைப் பருகுவதும் முறையாகச் சமைக்கப்படாத அல்லது மாசடைந்த உணவுகளை உட்கொள்வதும் இதற்கான முக்கிய காரணங்களாகும்.

அதுமட்டுமல்ல, மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் பிற சுவாசப் பாதைத் தொற்றுகள் ஏற்படலாம். குறிப்பாக, வெள்ள நிவாரண மையங்கள் போன்ற மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் இத்தகைய தொற்றுகள் எளிதில் பரவக்கூடும். இருமல் அல்லது தும்மும்போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்வதுடன், கைகளை முறையாகக் கழுவுவதும் அவசியமாகும்.


                          நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளப் பொதுமக்கள் சில அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

1. குடிப்பதற்குக் கொதிக்கவைத்த அல்லது பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்த வேண்டும். 

2. உணவு உட்கொள்வதற்கு முன்னரும் கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னரும் கைகளைச் சோப்பினால் கழுவ வேண்டும்.

3. வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

4. வெள்ளநீரில் நடப்பதையும் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும்.

5. உணவுப் பொருட்களை மூடி வைப்பதுடன், சுத்தமாகச் சமைத்த உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

6. காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மழைக்காலத்தில் ஏற்படும் சிறிய உடல்நலப் பிரச்சினைகளைக்கூட அலட்சியப்படுத்தக் கூடாது. குறிப்பாக, வெள்ளநீருடன் தொடர்பில் இருந்த பின்னர் காய்ச்சல் அல்லது உடல் வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் அதுகுறித்துத் தெரிவிப்பது அவசியம்.

முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதும் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். எனவே, இந்த மழைக்காலத்தில் தனிநபர் சுகாதாரத்திற்கும் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கும் பொதுமக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.