Skip to main content

Advertisement

News

உலக கடவுச்சீட்டு தரவரிசையில் மலேசியா 2ஆம் இடம்

2026ஆம் ஆண்டுக்கான உலக கடவுச்சீட்டு தரவரிசையில் மலேசியக் கடவுச்சீட்டு, சிங்கப்பூருடன் இணைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டில் மூன்றாம் இடத்தில் இருந்த மலேசியக் கடவுச்சீட்டு, இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement

புதிய தரவரிசையின்படி, மலேசியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மொத்தம் 175 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குப் பயணம் செய்யும் வசதியைப் பெற்றுள்ளனர். அவற்றில் 129 இடங்களுக்கு நுழைவிசைவு தேவையில்லை. மேலும், 46 இடங்களில் சென்றடைந்ததும் நுழைவிசைவைப் பெறும் வசதி உள்ளது. அதேவேளை, 23 இடங்களுக்குப் பயணம் செய்வதற்கு முன்கூட்டியே நுழைவிசைவு பெற வேண்டும்.

மலேசியக் குடிநுழைவுத் துறை தனது சமூக ஊடகப் பதிவில், இந்தச் சாதனை மலேசியக் கடவுச்சீட்டின் சர்வதேச அளவிலான வலிமையையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையையும் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த தரவரிசையில் ஐக்கிய அரபு அமீரகக் கடவுச்சீட்டு முதலிடத்தில் உள்ளது. மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.

ஸ்பெயின் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, ஸ்வீடன், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் நோர்வே உள்ளிட்ட 16 நாடுகள் நான்காம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

மலேசியக் கடவுச்சீட்டின் தரவரிசை முன்னேற்றம், மலேசியர்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்வதில் உள்ள சர்வதேச அணுகல் தொடர்ந்து வலுப்பெற்று வருவதைக் காட்டுகிறது.

மூலம்: The Passport Index Global Ranking 2026