Skip to main content

Advertisement

News

வெள்ளம் குறித்து அலட்சியம் வேண்டாம்!

வெள்ளம் என்பது வெறும் செய்தி அல்ல. இன்றைய காலகட்டத்தில் மலேசியாவில் மட்டுமல்லாமல், தாய்லாந்து, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளிலும் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 

Advertisement

திடீரென ஏற்படும் வெள்ளத்தால் பல பகுதிகளில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுவதால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உடைமைகள் சேதமடைவதுடன், வாகனங்களும் பாதிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இந்த வெள்ளம் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. 

“வெள்ளம் வருமுன் அணை போடு” என்பதுபோல், ஆபத்து வருவதற்கு முன்பே நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.

வெள்ளம் தொடர்பான தகவல்கள் மற்றும் வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள, அதிகாரப்பூர்வமான "InfoBanjir" பக்கங்கள் மற்றும் நம்பகமான செய்தி ஊடகங்களைப் பின்தொடருங்கள். உங்கள் பகுதியில் வெள்ள அபாயம் இருப்பதாகத் தெரிந்தால், முக்கியமான ஆவணங்கள், மருந்துகள் மற்றும் தேவையான பொருட்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

வெள்ளம் ஏற்படும் போது பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. குறிப்பாக ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

உங்கள் அருகிலுள்ள ஆறு அல்லது நீர்நிலையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணியுங்கள். நீர்மட்டம் ஆபத்தான அளவுக்கு உயரத் தொடங்கினால், அங்கு தங்காமல் உடனடியாக பாதுகாப்பான, உயரமான இடத்திற்குச் செல்லுங்கள்.

வெள்ளம் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, வருவதற்கு முன்பே தயாராக இருப்பதே பாதுகாப்பானது. விழிப்புடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்!