Skip to main content

Advertisement

Society & Culture

தேசிய அளவிலான தீபாவளிக் கொண்டாட்டத்தில் 5,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு!

2026ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தீபாவளிக் கொண்டாட்டம் வரும் நவம்பர் 14ஆம் தேதி கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த சுமார் 5,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோக் ஆரோன் அகொ டாகாங், தீபாவளியின் ஒளி: ஒற்றுமையை வளர்ப்போம் ('The Light of Deepavali: Fostering Unity') என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சகம் (KPN) மற்றும் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (MAICCI) இணைந்து ஏற்பாடு செய்கின்றன.

Advertisement

மேலும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளார். காலை 8 மணி முதல் இரவு 11.30 மணி வரை கொண்டாட்டங்கள் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் கோலமிடுதல், எண்ணெய் விளக்குகள் ஏற்றுதல், பாரம்பரிய உணவுகள் தயாரித்தல் மற்றும் திறந்த இல்ல உபசரிப்பு போன்ற தீபாவளிப் பாரம்பரியங்களுடன் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

அத்துடன், வீணை மற்றும் மிருதங்க இசை நிகழ்ச்சிகள்,  சிலம்பம்,  களரிப்பயட்டு,  கர்ரா சாமு போன்ற பாரம்பரிய தற்காப்புக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பும் நடைபெறவுள்ளன.

இதில் மலாய், சீனர், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி மற்றும் மலையாளி சமூகங்களின் பாரம்பரியங்களையும் கலாசாரங்களையும் எடுத்துக்காட்டும் 'Rumah KAMI' (எங்கள் இல்லம்) என்ற சிறப்பு அரங்கும் இடம்பெறவுள்ளது.

மேலும், யோகி பி மற்றும் நட்சத்திரா, புக்கிமான்,  ஹேவாக் பிரதர்ஸ், சுபிர் கான், காயத்ரி சந்திரபானி, காஷ்மீர் ஸ்டோன் மற்றும் குமரேஷ் உள்ளிட்ட உள்ளூர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளன.

தீபாவளி என்பது மத ரீதியான கொண்டாட்டம் மட்டுமல்ல. வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளவும்,  புரிந்துகொள்ளவும், அவர்களின் கலாசாரங்களை மதிக்கவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் ஒற்றுமையையும் பல்வேறு கலாசாரங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் தொடர்ந்து வலுப்படுத்துவதில் அனைவருக்கும் பங்கு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.