Skip to main content

Advertisement

Society & Culture

ஆஸ்ட்ரோ நிறுவனத்தில் களைகட்டிய தீபாவளிக் கொண்டாட்டம்!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆஸ்ட்ரோ நிறுவனம் தனது அலுவலகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, சக ஊழியர்களுடன் மகிழ்ச்சியையும் பண்டிகைக் கொண்டாட்டத்தையும் பகிர்ந்துகொண்டது.



அந்த வகையில், அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஆஸ்ட்ரோவின் ஆசியா ஒலிபரப்பு மையத்தின் (AABC) கிழக்கு நுழைவாயில் மற்றும் நடைபாதைப் பகுதியில் இரண்டு நாட்கள் தீபாவளி சந்தை நடைபெற்றது. இதில் பாரம்பரிய இந்திய ஆடைகள், அணிகலன்கள், பண்டிகைக்கான தின்பண்டங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் எனப் பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு இடம்பெற்றன. இதன் மூலம் அலுவலகத்திலேயே தீபாவளிக்கான தயாரிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு ஊழியர்களுக்குக் கிடைத்தது.
 

Advertisement


தொடர்ந்து, நவம்பர் 3ஆம் தேதி வண்ணமயமான அரிசிகளைக் கொண்டு கோலம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆஸ்ட்ரோ ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, பாரம்பரிய கோலங்களை உருவாக்கினர். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொடர்புத்துறை துணை அமைச்சர் மாண்புமிகு தியோ நீ சிங் சிறப்பு வருகை தந்து, ஊழியர்களுடன் இணைந்து கோலம் போடும் நடவடிக்கையில் கலந்துகொண்டார். இந்த வருகை ஊடகச் சந்திப்பின் ஒரு பகுதியாகவும் அமைந்தது. மேலும், பங்கேற்றவர்களுக்கு இலவசமாக மசாலா தேநீரும் வழங்கப்பட்டது.

 



இதற்கிடையில், நவம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை ஆஸ்ட்ரோவின் பல்வேறு துறைகளுக்கு இடையிலான தீபாவளி அலங்காரப் போட்டியும் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு துறையினரும் தங்களது அலுவலகப் பகுதிகளைப் பல்வேறு படைப்பாற்றல் மிக்க அலங்காரங்களால் அழகுபடுத்தினர். குழு ஒத்துழைப்பு, கற்பனைத் திறன் மற்றும் தீபாவளிப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற குழுக்களுக்கும், பங்கேற்ற அனைத்து துறையினருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
 


இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 17ஆம் தேதி ஆஸ்ட்ரோவின் ஸ்டூடியோ 1-இல் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. காலை நேரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், நடனங்கள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் களைகட்டியது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஆஸ்ட்ரோவின் தலைமை உள்ளடக்க அதிகாரி ஆக்னஸ் ரொசாரியோ, தலைமை மனிதவள அதிகாரி நாசியாத்துல் ஷஃபீனாஸ், வாடிக்கையாளர் அனுபவப் பிரிவு இயக்குநர் சிந்தியா சியோ  மற்றும் ICB குழுவினர் இணைந்து பாரம்பரிய தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னெடுத்தனர். இது ஒற்றுமை, ஒளி மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தது.

தொடர்ந்து, தீபாவளியின் சிறப்பையும் அதன் பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கும் வகையில் நடன நாடகம் அரங்கேற்றப்பட்டது. மேலும், ஆஸ்ட்ரோவின் தர உத்தரவாதப் பிரிவைச் சேர்ந்த சப்ரீனா கவுர்  மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு மையத்தின் ஊழியர்கள் தங்களது திறமைகளை மேடையில் வெளிப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.

 

 



நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பம்சமாக, சிறந்த ஆடை அணிந்த ஊழியர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. பாரம்பரிய மற்றும் வண்ணமயமான ஆடைகளில் வந்திருந்த ஊழியர்களில் சிறந்த ஆடை அணிந்தவர்களுக்கான வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுப் பாராட்டப்பட்டனர். 

இவ்வாறு சந்தை, கோலமிடுதல், அலங்காரப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஆஸ்ட்ரோ தனது நிறுவனத்தில் தீபாவளிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி, ஊழியர்களிடையே ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.