Skip to main content

Advertisement

News

2023ஆம் ஆண்டு முதல் காலாவதியான சாலை வரியுடன் சென்ற 35,555 வாகனங்கள் பறிமுதல்!- போக்குவரத்து அமைச்சு

புகைப்படம்: அலங்காரப் படம்

Advertisement

 

2023ஆம் ஆண்டு முதல் இதுவரை, காலாவதியான சாலை வரியுடன் பொதுச் சாலைகளில் பயணித்த 35,555 வாகனங்களைச் சாலைப் போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்துள்ளது.

இது தொடர்பாக, போக்குவரத்து அமைச்சு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதே காலகட்டத்தில் காலாவதியான சாலை வரியுடன் வாகனங்களை ஓட்டியவர்களுக்கு எதிராக மொத்தம் 16,08,238 P22 அபராத அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு சாலை வரி (e-LKM) முறை, நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதுடன், சாலை வரி அட்டைகளை அச்சிடுவதற்கான செலவுகளைக் குறைக்கவும், சேவை மையங்களில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது வாகனங்களில் சாலை வரி அட்டைகளை ஒட்ட வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், வாகன உரிமையாளர்கள் தங்களது சாலை வரியை உரிய காலத்தில் புதுப்பித்து, அதன் செல்லுபடியாகும் காலத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேலும், சாலைப் போக்குவரத்துத் துறையின் அதிகாரிகள் டிஜிட்டல் முறையில் வாகனங்களின் சாலை வரி நிலையைச் சரிபார்க்க முடியும். காலாவதியான சாலை வரியுடன் பொதுச் சாலைகளில் வாகனங்களை ஓட்டுபவர்கள், 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம்: பெர்னாமா