
புகைப்படம்: பெர்னாமா
Advertisement
நெகிரி செம்பிலானில் பதிவுசெய்யப்பட்ட கடல் ஆமை கூடுகளின் எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டில் 13 ஆக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் 45 ஆக அதிகரித்துள்ளது. இது மூன்று மடங்குக்கும் அதிகமான உயர்வாகும். போர்ட் டிக்சனில் அழுங்காமை மற்றும் பச்சை ஆமை ஆகிய இரு வகை கடல் ஆமைகளின் கூடுகள் பதிவாகியுள்ளன.
நெகிரி செம்பிலான் மாநில மீன்வளத் துறை இயக்குநர் திரு. காசிம் தவீ, இந்த அதிகரிப்பு மாநிலத்தின் சில கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக போர்ட் டிக்சனில் கடல் ஆமைகள் தொடர்ந்து கரைக்கு வந்து முட்டையிடுவதைக் காட்டுகிறது என்று தெரிவித்தார்.
“ஆமைகள் கரைக்கு வருவது தஞ்சோங் கெமுக்கில் மட்டும் நடைபெறுவதில்லை. தஞ்சோங் துவான் முதல் தஞ்சோங் கெமுக் வரையிலான போர்ட் டிக்சனின் பல கடற்கரைப் பகுதிகளிலும் அவை கரைக்கு வந்து முட்டையிடுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆமைகள் கரைக்கு வருதல், முட்டைகளை அடைகாத்தல் மற்றும் குஞ்சுகள் பொரித்தல் தொடர்பான பதிவுகளின்படி, பதிவுசெய்யப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கையும், வெற்றிகரமாக பொரித்த குஞ்சுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் மொத்தம் 5,552 ஆமை முட்டைகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், அவற்றில் 4,371 முட்டைகள் வெற்றிகரமாக பொரிந்தன. இதற்கு மாறாக, முந்தைய ஆண்டில் 3,333 முட்டைகள் பதிவுசெய்யப்பட்டு, 1,080 முட்டைகள் மட்டுமே பொரிந்தன.
தஞ்சோங் கெமுக் கடல் ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிடும் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்குமாறு மலேசிய கடல் பாதுகாப்பு ஆர்வலர்கள் முன்வைத்த பரிந்துரை குறித்து காசிம், அப்பகுதி பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட பொது கடற்கரையாக இருப்பதால், அதனைத் தனி பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அதற்குப் பதிலாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், கடற்கரையைத் தூய்மையாகப் பராமரிப்பதும், ஆமைகள் முட்டையிடுவதற்காக கரைக்கு வரும்போது அவற்றுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
தஞ்சோங் கெமுக் கடற்கரை போர்ட் டிக்சன் நகராட்சி மன்றத்தின் (MPPD) நிர்வாகத்தின் கீழ் உள்ள பொது கடற்கரையாகும். கடற்கரைப் பகுதியின் தூய்மை மற்றும் அங்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவது உள்ளிட்ட பொறுப்புகளை MPPD ஏற்றுள்ளது.
மேலும், அப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள குளோரி பீச் தங்குமிடத்தைப் போர்ட் டிக்சனில் தனியார் கடல் ஆமை பாதுகாப்பு மையமாக மீன்வளத் துறை நியமித்துள்ளதாக காசிம் தெரிவித்தார்.
பொது கடற்கரையான தஞ்சோங் கெமுக் பகுதியில் ஆமைகள் முட்டையிடும் இடங்களைப் பாதுகாப்பதற்கு MPPD, போர்ட் டிக்சன் மாவட்ட மற்றும் நில அலுவலகம், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் கூறினார்.
இதனிடையே, தஞ்சோங் கெமுக் கடல் ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிடும் முக்கியமான பகுதியாக இருப்பதால், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் முறைப்படுத்த வேண்டும் என குறித்த NGO முன்னதாக வலியுறுத்தியிருந்தது. ஆமைகள் கரைக்கு வரும் பகுதிகளை அடையாளம் காணுதல், கூடுகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்திருந்தது.
சமீபத்தில் தஞ்சோங் கெமுக் கடற்கரையில் அழுங்காமையின் கூடு ஒன்று சேதப்படுத்தப்பட்டு, அதிலிருந்த முட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டது.
மூலம்: பெர்னாமா